இலங்கை

மஹர சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள்; பலர் பூஸாவுக்கு மாற்றம்! ஊரடங்கு நீக்கம்

இலங்கை மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து கைதிகள் குழுவொன்று சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் , பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் அந்த முயற்சிகள் பல கட்டங்களில் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு முழுவதும் நீடித்த பதற்ற சூழ்நிலை இன்று (02) முற்பகலுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ், விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை, கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மஹர சிறைச்சாலையில் இருந்த 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று மஹர சிறைச்சாலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்த சிரேஷ்ட பிரதி காவல்துறைத் தலைவர் சஜீவ மெடவட்டே, வெலிக்கடை, மெகசின், களுத்துறை, நீர்கொழும்பு உள்ளிட்ட அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பும் தற்போது விசேட கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

நேற்றைய சம்பவத்தால் சிறைச்சாலையில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கைதிகள் பல்வேறு கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அடுத்த சில மணிநேரங்களில் சிறைச்சாலையின் இயல்பு நிலையை முழுமையாக மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், மஹர சிறைக் கலவரம் தொடர்பாக உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் சிறைச்சாலை சமையலறை, புனர்வாழ்வு கட்டிடம், புனர்வாழ்வு அலுவலகம், பிரதான சிறைக்காவலர் அலுவலகம் மற்றும் சிறை மருத்துவமனை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார்.

கலவரத்திற்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சிறை வளாகத்தைச் சுற்றி திரண்டுள்ள கைதிகளின் உறவினர்கள் அமைதியாக நடந்துகொண்டு அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள 246/கெந்தலியத்த பாலுவ – மேற்கு, 246/சீ கெந்தலியத்த பாலுவ – வடக்கு மற்றும் 181/ஜீ தம்புவ ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்த பதற்ற நிலை உருவானது. சம்பவத்தில் 7 கைதிகள் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை, பொலிஸார், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து செயல்பட்டதுடன், விமானப்படையின் பெல் 412 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மேலும், கைதிகளால் தலைமை சிறை கட்டுப்பாட்டாளரின் அலுவலகம் மற்றும் ஒழுக்கவியல் பிரிவு ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் காரணமாக கைதிகளைச் சந்திக்க வந்த உறவினர்களுக்கு சிறைச்சாலைக்குள் அனுமதி வழங்கப்படாததால், சிறைச்சாலைக்கு முன்பாக திரண்ட அவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே குறுகிய நேர பதற்ற சூழலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button