
தற்போதுள்ள முறைமையின் சாதகமான மற்றும் பாதகமான விடயங்களை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கல்விச் சீர்திருத்தமொன்று சாதகமான மற்றும் பாதகமான என்பதை குறுகிய காலத்தில் தீர்மானிக்க முடியாது என்றும், அது நீண்ட காலத்தில் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதால், ஏனைய சீர்திருத்தங்களை விட கல்விச் சீர்திருத்தங்களின்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புதிய கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்கும் போது எழக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள சமூக சவால்களை ஆழமாக மீளாய்வு செய்து, புதிய சமூகத்திற்குப் பொருத்தமானதொரு பிரஜையை உருவாக்குவதற்குத் தேவையான விடயங்களை புதிய கொள்கைக் கட்டமைப்பில் உள்ளடக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தற்போது முறையாக மேற்பார்வைக்குட்படாத கல்வியுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிப்பதன் அவசியம் குறித்தும், தனியார் கல்வியை ஒழுங்குபடுத்தாமையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பல்கலைக்கழகக் கல்வியை சீர்திருத்துவது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஏ. சரத் ஆனந்த உள்ளிட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.





