
இன்ஸ்டிடியூட் ஃபார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் (Institute for Economics and Peace) நடத்திய இந்த ஆண்டின் உலகளாவிய அமைதிச் குறியீட்டில் (Global Peace Index – GPI) இலங்கை 67 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 1.91 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் பூட்டானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. பூட்டான் உலகின் 16ஆவது மிகவும் அமைதியான நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டின் உலகளாவிய அமைதிச் குறியீட்டில் தெற்காசிய பிராந்தியம் மிக மோசமான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் ஒட்டுமொத்த சராசரி புள்ளி 2.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. உலகிலுள்ள எட்டு GPI பிராந்தியங்களில் இந்த பிராந்தியம் ஏழாவது இடத்தில் உள்ளது.
தெற்காசிய பிராந்தியத்திலுள்ள ஏழு நாடுகளில் ஐந்து நாடுகளில் அமைதி நிலைமை மோசமடைந்துள்ளதுடன், இரண்டு நாடுகள் மாத்திரமே முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. இந்த வீழ்ச்சிக்கு பிராந்தியத்தில் நிலவும் ‘தொடர் மோதல்கள்’ (ongoing conflict) என்ற காரணியே முக்கிய காரணமாகும்.
இது 7.1 சதவீத பெரும் மாற்றத்தைப் பதிவு செய்துள்ளதுடன், துணைக் கண்டத்தில் அதிகரித்து வரும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் எல்லைத் தாண்டிய பதற்றங்களை இது பிரதிபலிக்கிறது.
‘பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தலின்மை’ (Safety and Security) காரணி ஒப்பீட்டளவில் ஸ்திரமாக இருந்தபோதிலும், ‘இராணுவமயமாக்கல்’ (militarisation) காரணி சிறிய அளவிலான சராசரி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2026 உலகளாவிய அமைதிச் குறியீட்டில் உலகளவில் 16-வது இடத்தில் உள்ள பூட்டான், 2008-ஆம் ஆண்டில் உலகளவில் 69ஆவது இடத்தில் இருந்தது. பூட்டான் கடந்த ஆண்டை விட 0.4 சதவீத சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த சிறிய வீழ்ச்சிக்கு மத்தியிலும், பிராந்திய சராசரியை விட கணிசமான அளவு அமைதியான புள்ளிகளுடன், தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு விதிவிலக்கான நாடாக பூட்டான் தொடர்ந்து தனித்து நிற்கிறது.
ஆப்கானிஸ்தான் தொடர்ந்து தெற்காசியாவில் மிகக் குறைந்த அமைதியைக் கொண்ட நாடாக நீடிப்பதுடன், 2026 உலகளாவிய அமைதிச் குறியீட்டில் உலகளவில் 157-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 0.5 சதவீத சிறிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ள போதிலும், இது உலகளாவிய அமைதிச் குறியீட்டின் பல்வேறு குறிகாட்டிகளில் ஏற்பட்டுள்ள பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை மறைப்பதாக அமைந்துள்ளது.
இதற்கிடையில், 2026 உலகளாவிய அமைதிச் குறியீட்டில் இலங்கை பிராந்தியத்தில் மிகப்பெரிய சதவீத முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த புள்ளி 2.3 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது.
இலங்கையின் இந்த முன்னேற்றத்திற்கு ‘இராணுவமயமாக்கல்’ காரணி முக்கிய காரணமாக அமைந்ததுடன், அது 6.4 சதவீத முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. இதில் ஐநா அமைதிப்படைக்கான நிதிப் பங்களிப்பு (UN peacekeeping funding) குறிகாட்டி 40.8 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அத்துடன், ‘பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தலின்மை’ காரணியும் 1.8 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளதுடன், இதற்கு அரசியல் ஸ்திரமின்மை (political instability) குறிகாட்டியில் ஏற்பட்டுள்ள 25 சதவீத முன்னேற்றம் வழிவகுத்துள்ளது.
உலகம் தொடர்ந்து 12-வது ஆண்டாக அமைதி இழந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது நாடுகளுக்கு இடையே 61 தீவிர மோதல்கள் நிலவுகின்றன, இது இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.
103 நாடுகள் தற்போது ஏதேனும் ஒரு வெளிநாட்டு மோதலில் ஈடுபட்டுள்ளன, இது 2008-ஆம் ஆண்டை விட கிட்டத்தட்ட இரு மடங்காகும். 163 சுதந்திர நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலையை ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தும் இந்த அறிக்கையின்படி, ஐஸ்லாந்து உலகின் மிக அமைதியான நாடாக முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. பாதுகாப்பு, மோதல்கள் மற்றும் இராணுவமயமாக்கல் உள்ளிட்ட 23 குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்த குறியீடு கணக்கிடப்படுகிறது.





