
‘விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே அண்மையில் கைதான கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’’ என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா இராமநாதன், விடுதலைப் புலிகள் அமைப்புடன் எவ்விதத்திலும் தொடர்பில்லாத சங்கீதன் என்பவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் கூறுகையில், ‘‘விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் எந்தவொரு செயற்பாடு களுக்கும் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். எனினும், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமையுள்ளது.
விடுதலைப் புலிகள் தொடர்பில் பாடல் பாடி, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தமைக்காகவே கிளிநொச்சி இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன் கைது தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்றைய தினம் (நேற்று) கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதன் பின்னர் சாதகமான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’’ என்றார்.





