இலங்கை

தனியார் தேயிலைத் தோட்டங்களில் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை பகிரங்க குற்றச்சாட்டு!

இலங்கையின் தனியார் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் விளிம்புநிலை மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களுக்கும் சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதாகச் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், அவர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் பலவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ள ‘கட்டாய வேலை வாங்கல்’ என்பதற்கான அளவுகோல்களுடன் பொருந்திப் போவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்துத் தெற்காசியாவிற்கான சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் கருத்துத் தெரிவிக்கையில்:’இலங்கையிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்கள் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி, மலையகத் தமிழ் தொழிலாளர்களை நடத்தும் விடயத்தில் முறையான தொழிலாளர் சட்டங்களை திட்டமிட்டபடி மீறி வருகின்றன. நாம் விஜயம் செய்த அனைத்து இடங்களிலும் வன்முறைகள், கடன்பிணை அடிமைத்தனம், சம்பளம் நிறுத்தி வைக்கப்படல் மற்றும் மோசமான வாழ்க்கை-வேலைச் சூழல்கள் உள்ளிட்ட பாரபட்சமான அநீதிகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை தொழிலாளர்கள்

முறையிட்டுள்ளனர். சட்டப் பாதுகாப்புகள் நடைமுறையிலுள்ள போதிலும் இந்த அநீதிகள் தொடர்வது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரச இயந்திரம் அடைந்துள்ள தோல்வியையே பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையினால் 2024 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரையான இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கையின் தென் பகுதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

 

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள 45 தனியார் தேயிலைத் தோட்டங்களை முன்னிலைப்படுத்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இந்தியாவின் தெற்குப் பிராந்தியங்களிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மக்களின் சந்ததியினரே இந்த மலையகத் தமிழர்கள் ஆவர். இவர்கள் நீண்டகாலமாக நிலவிவரும் இனப் பாரபட்சம் மற்றும் புறக்கணிப்புகளை அனுபவித்து வருகின்றனர். இன்றுவரை தங்களது வாழ்வாதாரம், தங்குமிடம் மற்றும் நலன்புரி வசதிகளுக்காகத் தமது முதலாளிகளிலேயே பெருமளவில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுவதால், தங்களுக்கு நடக்கும் அநீதிகளை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.

ஆய்வு செய்யப்பட்ட 45 தோட்டங்களிலுமுள்ள தொழிலாளர்கள் தங்களது வீட்டு வசதிக்காக முதலாளிகளையே சார்ந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படக்கூடும் என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர்.

 

வேலைக்குத் தாமதமாக வந்ததற்காகவோ அல்லது வழங்கப்படாத சம்பளம் குறித்து விசாரித்ததற்காகவோ 15 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளர்களினால் வாய்மொழி மூலமாகவும், உடல் ரீதியாகவும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஒரு தொழிலாளி விவரிக்கையில், ‘நீங்கள் வேலை செய்யாவிட்டால் மற்றும் இலக்குகளை அடையாவிட்டால், அவர்கள் எங்களை அடிக்க முற்படுகின்றனர். கைகள், கால்கள் மற்றும் தடிகளால் எங்களைத் தாக்குவார்கள். கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் சிலரைத் தாக்கியுள்ளனர். அது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வு செய்யப்பட்ட 45 தோட்டங்களில் 27 தோட்டங்கள், தொழிலாளர்கள் நாளாந்தம் 25 கிலோ கிராமுக்கும் அதிகமான தேயிலைக் கொழுந்துகளைப் பறிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த நடைமுறைச் சாத்தியமற்ற இலக்குகளை அடையத் தவறும்போது, அவர்களின் நாளாந்த மிகச்சிறிய சம்பளத்திலிருந்து 1,000 ரூபா (சுமார் 3.10 அமெரிக்க டொலர்கள்) கழிக்கப்படுகிறது அல்லது தாமதப்படுத்தப்படுகிறது

சுப்பிரமணியம் என்ற தொழிலாளி, ‘நாங்கள் எமக்கு வழங்கும் வேலையை முடிக்காவிட்டால், அவர்கள் எமது மூன்று நாட்கள் வேலையை ஒரு நாள் வேலையாகக் கணக்கிடுகின்றனர். நாங்கள் வேலையை முடித்தால் மட்டுமே 1,000 ரூபா வழங்குகிறார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய தந்திரோபாயங்கள் காரணமாகத் தொழிலாளர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தோட்ட நிர்வாகத்திடம் முன்பணம் மற்றும் கடன்களைப் பெற வேண்டியுள்ளதுடன், அது அவர்களின் கடனை மேலும் அதிகரித்து, தலைமுறை தலைமுறையாகக் கடன்பிணை அடிமைத்துவ நிலையை உருவாக்குகிறது.

குறைந்தது 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது நடமாட்டச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை விவரித்துள்ளனர். இதில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் பயணங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டிய கட்டாயங்கள் உள்ளடங்குகின்றன. அத்துடன், அவர்களின் வசிப்பிடங்கள் போதிய இடவசதி இன்மை மற்றும் சுகாதாரமான மலசலகூட வசதிகள் இன்மை போன்ற குறைபாடுகளுடன் காணப்படுகின்றன.

தனியார் தோட்டங்கள் இவர்களைச் ‘சட்டவிரோதமாக’ ‘அமையத் தொழிலாளர்களாக’ வகைப்படுத்துவதால், இவர்களுக்குரிய மகப்பேற்றுக்கால சலுகைகள், ஓய்வூதியம் மற்றும் மருத்துவ விடுமுறைகள் போன்ற அடிப்படைச் சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

மேலும், தொழிலாளர்கள் தங்களுக்கு நடக்கும் அநீதிக்குச் சட்ட ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். அரச அதிகாரிகள் மலையகத் தமிழர்களைப் பாரபட்சமாக நடத்துவதுடன், பாதுகாப்பு வழங்க வேண்டிய அரச நிறுவனங்களில் பெரும்பாலான அதிகாரிகள் இவர்களின் மொழியைப் பேசத் தெரியாதவர்களாக (மொழித் தடை) இருப்பதால், தொழிலாளர்களால் தங்களது பிரச்சினைகளை முறையிட முடிவதில்லை.

அத்துடன், எந்தவொரு தோட்டத்திலும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கங்கள் செயற்படவில்லை என்பதும், அவை நிர்வாகத்தினரால் தடை செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை அரசாங்கம் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஓர் உறுப்பினர் என்பதோடு அதன் 44 சமவாயங்களிலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ள ஒரு தரப்பாகும். எனவே, தொழிலாளர்களைப் பாரபட்சமின்றிப் பாதுகாக்கும் கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டு. தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படும் அளவைத் துல்லியமாகத் தீர்மானிக்க உடனடியாகத் தோட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் எனவும், குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு முறையான தீர்வுகளை வழங்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button