
நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார யதார்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், எதிர்வரும் சில தினங்களில் எரிபொருள் விலைகளை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, டீசல் லீற்றர் ஒன்றின் விலை குறைந்தது 600 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில்:
“தோராயமாக டீசல் விலையை குறைந்தது 600 ரூபாவிற்காவது கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகும். மே 06 ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தது 20 முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், அதனை ஒரு மானியத்தை வழங்கி ஓரளவுக்கு சமநிலைப்படுத்த முடியும்.
ஒருவேளை எரிபொருள் விலையை அதிகரிக்காமல் அப்படியே வைத்திருந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தற்போது அரங்கேறி வருகிறது.
அது ரூபாய் மேலும் வீழ்ச்சியடைவதற்கே வழிவகுக்கும். ரூபாய் வீழ்ச்சியடைந்தால் என்ன நடக்கும்? எரிபொருள் விலை மீண்டும் உயரும். இந்த நச்சுச் சுழற்சியில்தான் நாம் கடந்த காலங்களில் பயணித்தோம். அதுதான் பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் பாதையாகும்.
இது பணவீக்கத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எரிபொருள் விலையை உயர்த்தாமல் விட்டு, அதன் காரணமாக ரூபாய் வீழ்ச்சியடைந்தால், அது பணவீக்கத்திற்கு இதைவிட மோசமான பாதிப்பை உண்டாக்கிவிடும்” எனத் தெரிவித்தார்
.எரிபொருள் விலையை உயர்த்தும் அதேவேளையில், தெரிவுசெய்யப்பட்ட சமூகக் குழுக்களுக்கு மாத்திரம் எரிபொருள் மானியத்தை கிரமமாகச் செயற்படுத்துவது இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.
“எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும் என்று கூறும்போது, அது எப்போதும் ஒரு சமூக மானியத்துடனேயே இணைக்கப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி, அரசாங்கம் கூறும் தரவுகளின்படி ஒவ்வொரு டீசல் லீற்றருக்கும் 100 ரூபா மானியம் வழங்கப்படுகிறது. பொதுவாக எரிபொருளுக்கு ஒட்டுமொத்தமாக மானியம் வழங்கப்பட்டால், அதன் பலன் மானியம் தேவையற்ற செல்வந்தர்களுக்கே அதிகம் சென்றடைகிறது.
அதற்குப் பதிலாக, வறிய மக்களைத் துல்லியமாகத் தெரிவுசெய்து இந்த மானியத்தை வழங்கினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம். குறிப்பாக, பொதுப் போக்குவரத்துச் சேவைக்கு அவர்கள் பயணிக்கும் கிலோமீற்றர் தூரத்தின் அடிப்படையில் மிக இலகுவாக எம்மால் டீசல் மானியத்தை வழங்க முடியும்.
இலங்கையிலுள்ள பெரும் பணக்காரர்களுக்கு இந்த மானியத்தைச் சலுகையாக வழங்குவதை விட, பேருந்தில் பயணிக்கும் சாதாரண ஏழை மனிதனுக்கு இதனை வழங்குவது எவ்வளவோ சிறந்தது அல்லவா?”
என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.





