இலங்கை

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்குப் பாதிப்பு: முதல் 4 மாதங்களிலேயே எரிபொருள் இறக்குமதிச் செலவு ஒரு பில்லியன் டொலரைத் தாண்டியது!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள்ளேயே, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு மாத்திரம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக உத்தியோகபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த முழு 2025 ஆம் ஆண்டிற்குமே பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் இறக்குமதிச் செலவு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மட்டுமே காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே இந்த அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்தின் போது இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், இலங்கையின் எதிர்காலப் பொருளாதார நிலைவரம் எவ்வாறு அமையும் என எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த விபரங்களை வெளியிட்டார்.

தற்போது குறிப்பிட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையானது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் இறக்குமதிச் செலவு மட்டுமே ஆகும். ஏனைய இரண்டு தனியார் விநியோகஸ்தர்களின் இறக்குமதிச் செலவுகள் இதனுள் உள்ளடக்கப்படவில்லை. அவையும் சேர்க்கப்பட்டால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும்,” என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இக்கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்தியா கூட பல எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், மத்திய கிழக்கு போரின் விளைவுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வினவினார்.

 

அதற்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க,

 

“ஆம், இந்தியாவிடம் தற்போது 700 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பெருந்தொகை வெளிநாட்டு கையிருப்பு உள்ள போதிலும், அவர்கள் மிகவும் அவதானமாக இத்தகைய சேமிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்,” என ஏற்றுக்கொண்டார்.

 

 

இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண போர்ச் சூழலானது அடுத்த மூன்று மாதங்களுக்குள் தணிந்துவிடும் அல்லது படிப்படியாக சீராகிவிடும் என்ற கணிப்பின் அடிப்படையிலேயே மத்திய வங்கி தற்போதைய பொருளாதார இலக்குகளையும் கணிப்புகளையும் தயாரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button