
உலகளாவிய ரீதியில் உரத்தின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையிலுள்ள சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு மேலதிக உர மானியத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மத்திய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
இந்த விசேட திட்டத்திற்கான நிதியை திறைசேரி முலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் உரத்தட்டுப்பாடு நிலவவில்லை என்ற போதிலும், சர்வதேச சூழலைக் கருத்தில் கொள்ளும்போது எதிர்காலத்தில் உரத்தின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் நெருக்கடிகள் காரணமாக உரத்தின் விலை அதிகரித்துள்ளதுடன், கப்பல் கட்டணங்கள் மற்றும் கடல்சார் காப்புறுதி கட்டணங்களும் அதிகரித்துள்ளன.
இதனால் இறக்குமதி செய்யப்படும் உரத்தின் செலவு அதிகரித்த போதிலும், நாட்டுக்குள் தடையின்றி உர விநியோகத்தை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏற்கனவே நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்காக வழங்கப்பட்ட நிவாரணங்களைப் போன்று, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படவுள்ளது.
ஏற்கனவே ஒரு ஹெக்டேயருக்கு 5,000 ரூபா வீதம், அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேயர் வரை (10,000 ரூபா) மேலதிக நிவாரணம் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நிலவும் சர்வதேச போர்ச் சூழலை கருத்திற்கொண்டு, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கும் தலா 5,000 ரூபா மேலதிக மானியத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலை அதிகரிப்பினால் விவசாயிகள் எதிர்நோக்கும் நிதிச் சுமையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.





