
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் தேசிய கண் வங்கிக்கு சுமார் 17,000 விழிவெண்படலங்கள் (Corneas) தானமாகப் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட விழிவெண்படலங்களைக் கொண்டு சுமார் 12,000 விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்தது போக, மேலதிகமாக உள்ள விழிவெண்படலங்கள் சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்க வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் சர்வதேச வேண்டுகோள்களின் அடிப்படையில் சுமார் 4,000 முதல் 5,000 வரையிலான விழிவெண்படலங்கள் வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் மற்றும் தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கையின் விழிவெண்படலங்களுக்குத் தொடர்ந்து கேள்வி நிலவி வருவதாகச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





