
உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், உருளைக்கிழங்கிற்கான உத்தரவாத விலையை வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 220 ரூபா என்ற உத்தரவாத விலையில் இன்று (10) முதல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலை (CWE) ஊடாக இந்தக் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் உள்ளூர் உருளைக்கிழங்குகள் லங்கா சதோச விற்பனை நிலையங்கள் ஊடாக மக்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்துவதுடன், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.





