
முன்னைய ராஜபக்ச அரசாங்கங்களின் நிர்வாகச் சீர்கேடுகளை விட, தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற நிதி மேலாண்மை நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு நிர்வாகத் திறமை சற்றும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தவறான கட்டணச் செலுத்தல் முறைகள் மூலம் நாட்டின் நிதி வீணடிக்கப்பட்டு வருகின்றது.
திறைசேரி மோசடிகள் குறித்துக் கேள்வி எழுப்பினால், விசாரணைகள் நடைபெற்று வருவதால் தற்போது பதிலளிக்க முடியாது என அரசாங்கம் நழுவுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அஸ்வெசும பயனாளிகளுக்கு 500 மில்லியன் ரூபாய் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் நிதி நிர்வாகத்தில் உள்ள பாரிய ஓட்டையைக் காட்டுகின்றது.
வீதிப் போக்குவரத்து அதிகார சபையில் ஒப்பந்தக்காரர்களுக்கு இரண்டு முறை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறான தவறான நிதிப் பரிமாற்றங்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடருமானால், கடந்த காலங்களில் இடம்பெற்ற நேரடி ஊழல்களை விடவும் மோசமான விளைவுகளை இவை ஏற்படுத்தும் எனச் சாணக்கியன் மேலும் சுட்டிக்காட்டினார்.




