
இலங்கை நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவி, இணைய குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது அவதானத்தைச் செலுத்தியுள்ளது.
இது தொடர்பாக பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்புக்குள் அத்துமீறி நுழைந்ததை உறுதிப்படுத்தி நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையைத் தாம் அறிந்திருப்பதாகவும், இந்த முக்கிய நகர்வை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு வழங்க வேண்டிய கடன் தவணையைச் செலுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கை, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது.
ஏற்கனவே 46 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த முடியாமல் இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ‘நீடிக்கப்பட்ட நிதி வசதி’ திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது
இந்த மீளாய்வு நிறைவேற்றப்பட்டதும் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தமாக 3 பில்லியன் டொலர் நிதியை வழங்க 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





