
திருத்தப் பணிகளின் பின்னர் வடக்கு ரயில் பாதையில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை (Intercity) ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு தபால் ரயில் ஆகியன இன்றைய தினம் முதல் தமது சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.
அத்துடன், யாழ்தேவி ரயில் நாளை முதல் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் தீவைத் தாக்கிய “டித்வா” (Ditwa) சூறாவளி காரணமாக வடக்கு ரயில் பாதையின் 14 இடங்களுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனால் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி முதல் வேகக் கட்டுப்பாடுகளுடன் சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.
எனினும், ஜனவரி 19ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
தற்போது சேதமடைந்த 14 இடங்களும் நிரந்தரமாக புனரமைக்கப்பட்டுள்ளதையடுத்து, இன்றைய தினம் முதல் வழமை போன்று ரயில் சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.





