தமிழீழம்

கறுப்பு யூலைக்கு 40வயது இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம்.

பா.அரியநேத்திரன்

அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
கருப்பு யூலை ஏற்படுவதற்கான காரணம்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 1983,யூலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது. உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.

கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்தனர், அதன்பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய் கருத்துக்கள் வெளியாகிய நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலைசெய்யப்பட்டதாகவும், பலர் துடிக்க துடிக்க எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

யூலை 23 தொடங்கி ஒரு கிழமை நீடித்த இனப்படுகொலையில் தமிழ் மக்கள் 3,000 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அப்போது தெரிவிக்கப்பட்டது முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி அனைவரும் தாக்கப்பட்டனர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அது ஓர் இனப்படுகொலை. தமிழர்களைக் காக்க அரசு முற்படவே இல்லை. இந்த நேரம் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கில்லை என்று அதிபர் ஜெயவர்த்தனா வெளிப்படையாகவே பேட்டியளித்தார். சில இடங்களில் சிங்களக் காடையர்களோடு அரசப் படையினரும் சேர்ந்து கொண்டு தமிழர்களைத் தாக்கினர். அடக்குமுறை அரசப் பயங்கரவாதமாக உருக்கொண்டது. தமிழ் மக்கள் செய்வதறியாது தவித்தார்கள். ஏராளமானவர்கள் ஏதிலிகளாக தமிழர் தாயகப் பகுதிகளுக்குப் பயணமானார்கள்.

தமிழர்களுக்கான பாதுகாப்பு வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் மட்டுமே என்பதை யூலை கலவரம் அன்று உறுதி செய்தது. யூலைப் படுகொலை தற்செயலாக நடந்த ஒன்றன்று. அது சிங்களப் பேரினவாதத்தால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். உயர் பாதுகாப்பு நிறைந்த .கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தபட்ட கொடிய தாக்குதலே இதற்குப் போதிய சான்று.

சிங்களக் கைதிகளும் காவலர்களும் சேர்ந்து நடத்திய கொடுந்தாக்குதலில் 53 பேர் வரைக்குமான தமிழ் அரசியல் கைதிகள் கொடிய முறையில் துன்புறுத்திக் கொலை செய்யப்பட்டார்கள். குட்டிமணி, தங்கதுரை போன்ற விடுதலைப் போராளிகளின் விழிகளைத் தோண்டியெடுத்துக் கீழே போட்டு மிதித்து அவர்களைச் சொல்லொண்ணா வகையில் துன்புறுத்திக் கொன்றார்கள்.

காந்தியத்தில் நம்பிக்கை கொண்ட அகிம்சைப் போராளிகளையும் ஈவிரக்கமின்றிக் கொலை செய்தனர். இத்தனைக்கும் நடுவில் உளச்சான்றுக்கு உண்மையாகவும் மனித நேயத்தோடும் செயல்பட்டுத் தங்கள் வீடுகளில் தமிழர்களுக்குத் தஞ்சமளித்த சிங்களக் குடும்பங்கள் சிலவற்றின் உதவியினால்தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

யூலைப் படுகொலைகளுக்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் அப்போதும் இந்மியா மௌனம் காத்தது.1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய தேசிய எழுச்சியாக இது மாறியது. தமிழர் கொந்தளிப்பின் எதிரொலியாகத்தான் இந்திய நாடாளுமன்றத்திலேயே தலைமையமைச்சர் இந்திரா காந்தி யூலைக் கலவரத்தை இனப்படுகொலை என்று வண்ணித்து இலங்கையைக் கண்டனம் செய்தார். அயலுறவு அமைச்சர் நரசிம்ம ராவை கொழும்புக்கு நேரில் அனுப்பினார். அவர் அதிபர் ஜெயவர்த்தனாவைப் பார்த்து “கலவரத்தை நீங்கள் நிறுத்துகின்றீர்களா? நாங்கள் நிறுத்த வேண்டுமா?” என்று கேட்டாராம். அத்துடன் தமிழர்களுக்கு எதிரான வன்முறையும் முடிவுக்கு வந்தது.

யூலைப் படுகொலை பல வகையிலும் வரலாற்றில் ஒரு திருப்பமாக அமைந்தது. முதலாவதாக, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிங்கள இனத்துடன் சேர்ந்து வாழும் நம்பிக்கையை அது அடியோடு அழித்து விட்டது. தமிழர்கள் 1976 வட்டுக்கோட்டையில் எடுத்த தீர்மானத்தையும் 1977 பொதுத் தேர்தலில் தந்த ஆணையையும் செயலாக்குவது தவிர வேறு வழியில்லை என்பதை அறுதியாகவும் உறுதியாகவும் நிறுவியது. 1948ஆம் ஆண்டு தொடங்கிய இன ஒடுக்குமுறை 50களின் பிற்பகுதியில் இனவதையாக முற்றி 1983 யூலையில் அரசத் திகிலியமாகத் தீவிரமடைந்த நிலையில் தமிழ் மக்களின் உயிரும் மானமும் காக்க ஆயுதப் போராட்டம் தவிர வேறு வழியில்லை என்ற நிலை தோன்றியது.

எழுபதுகளின் தொடக்கத்தில் நிறுவப்பெற்ற விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் அரசியல் பொருத்தப்பாடுடையவை ஆனது யூலைப் படுகொலையிலிருந்துதான். இறுதியாக ஒன்று: 1983 யூலைப் படுகொலைக்காக அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா உள்ளிட்ட எந்த்த் தலைவரும் தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை. கலவரத்தில் குற்றம் புரிந்தவர்கள் யார், என்ன இனம், என்ன அரசியல் சார்பு என்றெல்லாம் கருதாமல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ஐநா அமைப்புக்கு அளித்த உறுதியை ஜெயவர்த்தனா காப்பாற்றவே இல்லை.

யூலைப் படுகொலைக்கான பொறுப்புக்கூறல், நீதி எதுவும் இன்று 40, வருடம் வரை மெய்ப்படவில்லை, அந்தக் கணக்கு இன்னும் முடியவில்லை. அதனால்தான் தமிழர்களுக்கு எதிராக என்ன குற்றம் செய்தாலும் தண்டனை பற்றி அஞ்சத் தேவையில்லாத குற்றவிலக்கு சிறிலங்காவில் நிலைபெற்று கால் நூற்றாண்டு கழித்து முள்ளிவாய்க்காலில் முழுவடிவம் பெற்றது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நாம் போராடிப் பெறும் நீதிதான் 83 யூலைப் படுகொலைக்கான நீதியாகவும் அமையப் போகிறது.

1948,ல் இருந்து 2023, வரை தமிழினப்படுகொலைகள் காலத்துக்காலம் தொடர்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் இதற்கான நீதியை கேட்டு சர்வதேச சமூகத்திடம் தமிழ்தேசிய தலைவர்ரகள் புலம் பெயர் அமைப்புகள் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்தபோதும் இதுவரை ஈழத்தமிழர்களுக்கான நீதி இலங்கையிலும், சர்வதேசத்திலும் மறுக்கப்பட்ட இனமாகவே தமிழினம் வாழ்கிறது என்பது மட்டுமே உண்மை.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button