சுவிஸ்

சோஃபிங்கன் தாக்குதல்: 7 பேரைத் தாக்கியவருக்குத் தண்டனை இல்லை, சிகிச்சை + நாடு கடத்தல்

ஆர்காவ் மாநிலத்தில் (Aargau) உள்ள சோஃபிங்கன் (Zofingen) நீதிமன்றம் நேற்று ஒரு வழக்கில் தீர்ப்பு சொன்னது. 2024-ல் ஏழு பேரைத் தாக்கிய ஸ்பெயின் நாட்டு ஆணுக்கு சிறைத் தண்டனை இல்லை. ஆனால் அவர் மனநல சிகிச்சை பெற வேண்டும், சுவிசை விட்டும் வெளியேற வேண்டும்.

44 வயதான இந்த நபர், 30 நிமிடத்துக்குள் வழியில் போனவர்களை எந்தக் காரணமும் இல்லாமல் தாக்கினார். சோஃபிங்கன் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பின்னாலிருந்து இரும்புப் பொருளால் தலையிலும் முகத்திலும் அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. அவரால் இன்றும் வேலைக்குப் போக முடியவில்லை.

வேலைக்கும் பள்ளிக்கும் கடைக்கும் போனவர்களையும் அவர் தாக்கினார். பேனாவாலும் பிறகு கத்தியாலும் குத்தினார். இரண்டு வீடுகளுக்குள் புகுந்தார். இரண்டாவது வீட்டில் ஒரு பெண்ணைக் காயப்படுத்தினார். போலீஸ் சிறப்புப் படை அவரைக் கைது செய்தது. எல்லோரும் உயிர் பிழைத்தார்கள். ஆனால் பலர் இன்னும் மன அதிர்ச்சியில் தவிக்கிறார்கள்.

அவருக்குப் பல ஆண்டுகளாக மிகக் கடுமையான மனநோய் (schizophrenia) இருப்பதாக நிபுணர் நீதிமன்றத்தில் கூறினார். மாஃபியா தன்னையும் குடும்பத்தையும் கொல்ல வருகிறது என்று அவர் நம்பினார். மருத்துவர் கொடுத்த மாத்திரைகளை அவர் சாப்பிடவில்லை. கஞ்சாவும் நோயை மோசமாக்கியது. அதனால் செயலுக்கு அவரைப் பொறுப்பாக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

அவர் மனநல மருத்துவமனை போன்ற மூடிய இடத்தில் சிகிச்சை பெற வேண்டும். இது பொதுவாக அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள். தேவைப்பட்டால் மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கலாம். அத்துடன் 15 ஆண்டுகள் சுவிசுக்குள் வர அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

அவர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். நடந்தது தனக்கு நினைவில்லை என்றும் கூறினார். தற்போது  அவர் ஒரு சிகிச்சை நிலையத்தில் வசிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்: SRF
புகைப்படம்: Tingey Injury Law Firm / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button