இலங்கை

2027 முதல் அரசாங்க ஒப்பந்தங்கள் ஊடாக மட்டுமே இஸ்ரேல் வேலைவாய்ப்பு!

அடுத்த ஆண்டு முதல் இலங்கையர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்குப் பணியமர்த்தும் நடவடிக்கை, இரு நாட்டு அரசாங்கங்களுக்கும்  இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படவுள்ளது.

இஸ்ரேல் அரசாங்கம் எடுத்துள்ள இந்தப் புதிய கொள்கைத் தீர்மானம் தொடர்பில், இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இதற்கமைய, உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புப் பணியமர்த்தல் வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கட்டுமானம், தொழிற்சாலை, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் புதிய தீர்மானம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய பணியமர்த்தல் முறைமை, பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மற்றும் தெரிவு செய்யும் நடைமுறைகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனிடையே, இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தனிநபர்களுக்கோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கோ பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வேலைவாய்ப்பை எதிர்பார்போரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பணியகம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை, தனியார் துறையினரால் நடத்தப்படும் திறன் பரீட்சைகள், நேர்முகப் பரீட்சைகள் மற்றும் பிற தெரிவு செய்யும் நடைமுறைகளில் பங்கேற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்காகச் சட்டப்பூர்வமாகப் பணம் செலுத்தியுள்ள நபர்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லை எனவும், அவர்கள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் தொடர்புடைய இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button