இலங்கை

அர்னாப் சூறாவளி நாளை மேலும் வலுவடையும் சாத்தியம்

வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் “அர்னாப்” (Arnab) சூறாவளி காரணமாக, தீவைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையை அண்டிய கடல் பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்காக வானிலை அவதான நிலையத்தின் இயற்கை  அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை மையத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இன்று (26) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை அடுத்துவரும் 12 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 1,050 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த இச்சூறாவளி, எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடைந்து நாளை (27) ஆம் திகதியளவில் “தீவிர புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்பின்னர், இது நாளை மறுதினம் (28) முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரைப்பகுதியைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பிட்ட அபாயகரமான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 – 100 கி.மீ வரை அதிகரிக்கக்கூடுவதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

கடல் அலைகள் சுமார் 3.0 – 4.0 மீற்றர் வரை உயரக்கூடுவதுடன், கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

 

வட அகலாங்கு 10° – 20° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80° – 95° இற்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினர் மறு அறிவித்தல் வரை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, உடனடியாக பாதுகாப்பான இடங்களைச் சென்றடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

கொழும்பு முதல் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 – 65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

 

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையை அண்டிய கடற்பகுதிகளில் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

 

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வீசும் காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 60 – 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button