இலங்கைதமிழீழம்

வடகிழக்கு மாகாண மக்கள், போரின் தாக்கங்களுக்கு இன்னமும் முகங்கொடுத்துவருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

மூன்று தசாப்தகாலப் போரினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், இன்னமும் அதன் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல், வடக்கு முஸ்லிம் வெளியேற்றம், மனிதப்புதைகுழிகள் என்பன உள்ளடங்கலாக மக்களின் மனித உரிமைகளைப் பாதிக்கும் பல்வேறு விவகாரங்களில் அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்குத் தடையாக இருக்கும் நீண்டகால அடிப்படையிலான கட்டமைப்புசார் பிரச்சினைகளைக் கண்டறிவதுடன், அவற்றுக்குத் தீர்வுகண்டு, அம்மக்களின் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கிலேயே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடங்கியுள்ளன.

அதற்கமைய 1983 – 2009 ஆம் ஆண்டு வரையிலான ஆயுதமோதல், 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவு மற்றும் அதன் பின்னரான சமூக, பொருளாதாரச் சூழல் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு 2024 ஒக்டோபர் – 2025 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட தரவுகள், களவிஜயங்கள் மற்றும் பல்தரப்பு சந்திப்புக்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் இவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் 1983 – 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்த ஆயுதமோதலினாலும், அதற்குக் காரணமான வரலாற்று ரீதியான பாகுபாட்டுக் கொள்கைகளினாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் மிகமோசமான மனித உரிமை மீறல்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புக்கள், பல்வேறுபட்ட கட்டமைப்பு ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்ததுடன், இப்போதும் அவற்றின் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்ற கட்டமைப்பு நிறுவப்பட்ட போதிலும், நிதிப்பற்றாக்குறை, நிர்வாக ரீதியான சிக்கல்கள், அரசியல் தன்முனைப்பின்மை மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பான கோப்புகள் முறையாகப் பேணப்படாமை உள்ளிட்ட பல்வேறு நடைமுறை குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இக்கட்டமைப்பின்மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.

இழப்பீடுகளோ அல்லது மரணச்சான்றிதழ்களோ தமக்குத் தீரவாகாது என்றும், வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் என்றும் கோரி பெரும்பாலும் பெண்களைத் தலைமை தாங்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதுடன் கண்காணிப்புகளும் தொடர்கின்றன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button