
சுவிற்சர்லாந்து:
சுவிஸ் ஈழத் தமிழர் துடுப்பாட்டச் சம்மேளனம் மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்த ‘ஐரோப்பிய பிரீமியர் லீக்’ (Europe Premier League – ESPL) கிரிக்கெட் தொடர் சுவிற்சர்லாந்தில் பெரும் உற்சாகத்தோடும் ரசிகர்களின் பேராதரவோடும் இனிதே நிறைவுற்றது.
கடந்த ஆண்டு சுவிற்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இம்முறை போட்டியை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகளும் களமிறங்கின. 8 உரிமையாளர்களைக் கொண்ட 8 பலமிக்க அணிகள் கோப்பையைக் கைப்பற்றக் கடும் போட்டியிட்டன.
பங்கேற்ற அணிகளின் விவரம்:
1. யாழ் KINGS
2. இராவணன் சேனை
3. சோழர்படை துடுப்பாட்டக் கழகம்
4. VILLEPARISIS SPARTANS
5. LB STRIKERS
6. EPINAY TAMIL STARS
7. PAANDIYAN SQUAD
8. ELICHY SUNRISE
போட்டியின் ஆரம்பத்தில் தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்களுக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் அகவணக்கமும் நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்ற அணிகளின் வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அணிகளின் புதிய சீருடைகளும் (Jersey) முறைப்படி வெளியிடப்பட்டு போட்டிகள் விறுவிறுப்பாகத் தொடங்கின.
போட்டிகள் மிக விறுவிறுப்பான இறுதிப் கட்டத்தை எட்டியபோது, போதிய வெளிச்சமின்மை காரணமாகவும், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்த அணிகள் மற்றும் வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் நடுவர்களால் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, தொடரின் புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்த யாழ் KINGS, LB STRIKERS மற்றும் EPINAY TAMIL STARS ஆகிய மூன்று அணிகளும் ‘இணை வெற்றியாளர்களாக’ (Co-Winners) நடுவர்களால் அறிவிக்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கான சுழற்கோப்பையும் பரிசுத் தொகையும் இம்மூன்று அணிகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

தொடர் முழுதும் திறம்பட விளையாடிய வீரர்களுக்கு ‘சிறந்த துடுப்பாட்ட வீரர்’, ‘சிறந்த பந்துவீச்சாளர்’ மற்றும் ‘தொடரின் நாயகன்’ ஆகிய உயரிய தனிநபர் விருதுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இப்போட்டித் தொடர் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறப் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு வழிகளிலும் உறுதுணையாக இருந்த அனைத்து அனுசரணையாளர்களுக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் சுவிஸ் ஈழத் தமிழர் துடுப்பாட்டச் சம்மேளனம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
தகவல்: சுவிஸ் ஈழத் தமிழர் துடுப்பாட்டச் சம்மேளனம்






