
சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், சுவிஸ் தேசிய வங்கி (SNB) தனது காலாண்டு நாணயக் கொள்கை முடிவின்படி வட்டி விகிதத்தில் மாற்றமின்றி தற்போதைய நிலையைத் தொடரத் தீர்மானித்துள்ளது.
“தேவையானால், பொருத்தமான நாணயக் கொள்கை நிலைமைகளை உறுதிப்படுத்த அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட சுவிஸ் தேசிய வங்கி தயாராக உள்ளது” எனவும் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்க மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) ஆகியவை தமது முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், சுவிஸ் தேசிய வங்கி தற்போதைய நாணயக் கொள்கையையே தொடரத் தீர்மானித்துள்ளது.
எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் சற்றே அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நாணயக் கொள்கை பணவீக்கத்தை விலை ஸ்திரத்தன்மை வரம்பிற்குள் வைத்திருப்பதற்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பொருத்தமானது என வங்கி தெரிவித்துள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி பணவீக்கத்தை 0% முதல் 2% வரையிலான அளவில் பேணுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச வர்த்தகக் கொள்கைச் சூழல் மற்றும் நாணய மாற்று விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதாகவும் சுவிஸ் தேசிய வங்கி எச்சரித்துள்ளது.





