தமிழீழம்

இலங்கையில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர்!

தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய இயக்குநர் ஸ்மிருதி சிங் தெரிவித்தார்.

 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “நீதிக்கான நீள் பயணம் ” என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2023 இல் நான் முதன்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்குச் சென்றபோது, நீதியையும் பதில்களையும் தொடர்ந்து தேடி வரும் தாயார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் மனஉறுதியைக் கண்டு நான் வியப்படைந்ததை நினைவில் வைத்திருக்கிறேன்; அன்றிலிருந்து இன்றுவரை அது என்னைப் பெரிதும் பாதித்துள்ளது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நான் மீண்டும் வந்து கொண்டிருக்கிறேன். குடும்பங்கள் மற்றும் தாயார்களின் இந்தப் போராட்டத்தை நீங்கள் ஒருமுறை நேரில் கண்ட பிறகு, அவர்களுடன் நிற்காமல் இருப்பது சாத்தியமில்லை என்பதால் தான் நான் மீண்டும் வருகிறேன்

இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, இன்றைய நாள் என்பது வெறும் ஒரு நினைவேந்தல் நாள் மட்டுமல்ல. இன்றைய மாநாடு “நீதிக்கான நீண்ட பயணம்” என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள தாயார்களுக்கும், அவர்களில் பலருக்கும், உண்மை மற்றும் நீதிக்கான தேடல் எந்தப் பதில்களும் இன்றி பல தசாப்தங்களாகத் தொடர்கிறது என்பதையும், நிலைமை இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் நினைவூட்டும் ஒரு நிகழ்வாக இது அமைகிறது.

அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை அளித்துள்ளன, பல குழுக்களை அமைத்துள்ளன மற்றும் நிறுவனங்களை உருவாக்கியுள்ளன.

ஆனால் குடும்பங்களுக்கான முதன்மையான கேள்வி: “தங்களது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? இதற்கான பதில்கள் யாரிடம் உள்ளன? இறுதியாக, இதற்கு யார் பொறுப்பு?” என்பது இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளது.

தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்பு சபை மதிப்பிட்டுள்ளது.

எனவே, காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதில் தொடரும் தோல்வியானது, எப்போதும் சித்தரிக்கப்படுவது போல வெறும் முடியாத ஒரு நிர்வாக நடைமுறை மட்டுமல்ல; அது பொறுப்புக்கூறலின் மிக ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது.

நாம் அறிந்தபடி, காணாமலாக்கப்பட்ட நபர்களுக்கான அலுவலகம் உட்பட பல வழிமுறைகளை இலங்கை நிறுவியுள்ளது.

இத்தகைய நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும். ஆனால், காணாமலாக்கப்பட்ட நபர்களுக்கு என்ன நடந்தது மற்றும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது, இந்தக் குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை நிறுவுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.

குடும்பங்களுக்கு உண்மை மற்றும் நீதி ஆகிய இரண்டும் பெற உரிமை உண்டு.

செம்மணியில் மட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 583 எலும்புக்கூடு எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அது வெறும் ஒரு இடத்தில் மட்டுமே.

பொதுமக்களின் நம்பிக்கையை நிறுவும் வகையில், போதுமான வெளிப்படைத்தன்மையுடன் சர்வதேச தடயவியல் தரநிலைகளுக்கு ஏற்ப இந்த விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும்.

இப்போதும் கூட, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பதில்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாகத் தேடி வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். நாம் எவ்வளவு காலம் தாமதிக்கிறோமோ, அவ்வளவு காலம் பதில்களை அறிவதற்கான வாய்ப்பை இழந்து கொண்டிருக்கிறோம்.

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம் பற்றி பலமுறை பேசியுள்ளது. ஆனால் இதுவரை, எண்ணத்திற்கும் செயலுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது.

உண்மையில், காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இந்த சர்வதேச தினத்தை நினைவுகூரும் வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நடத்திய சமீபத்திய நிகழ்வுக்கு வெளியே நடந்தவை, அந்த இடைவெளிக்கான ஒரு சிறந்த உதாரணமாகும்.

நிகழ்வுக்கு வெளியே போராட்டம் நடத்த முயன்ற தாயார்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸார்  மேற்கொண்ட கொடூரமான நடவடிக்கை, அமைதியான வழியில் ஒன்று கூடும் உரிமையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய இலங்கை அரசாங்கத்தின் கடமைக்கு முற்றிலும் எதிரானது.

இந்த முரண் எவருக்கும் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். யாருக்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதோ, அவர்களே பலவந்தமாக அதிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர்; இந்த நிலை மாற வேண்டும்.

கடந்தகால உள்நாட்டு வழிமுறைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த இடங்களில், தனது அணுகுமுறை முந்தைய அரசாங்கங்களை விட வேறுபட்டதாக இருக்கும் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இன்னும் உள்ளது.

தமிழ், சிங்களவர், முஸ்லிம் அல்லது பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இந்தப் பயணத்தில் சர்வதேச மன்னிப்பு சபை எப்போதும் ஒரு துணையாக இருந்து வருகிறது – என்றார்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button