சுவிஸ் இராணுவக் கட்டிடங்களைப் பராமரிப்பதில் பெரிய தாமதம் ஏற்பட்டுள்ளது. சுவிஸ் அரசின் நிதிக் கண்காணிப்பு அலுவலகம் (CDF) திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதைக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
இராணுவத்தின் பாராக்ஸ், விமான நிலையங்கள், பயிற்சி மைதானங்கள் எல்லாவற்றையும் Armasuisse Immobili என்ற அரசு அலுவலகம் பார்த்துக்கொள்கிறது. இது பாதுகாப்பு அமைச்சின் (DDPS) கீழ் வருகிறது. பழுதுபார்ப்பு வேலைகளை இவர்கள் உரிய நேரத்தில் செய்யவில்லை. இப்போது செய்து முடிக்க வேண்டிய வேலைகளுக்கு சுமார் 7.3 பில்லியன் பிராங்க் தேவை. முதலீட்டை இரட்டிப்பாக்காவிட்டால், 2030-க்குள் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர்களின் சொந்தக் கணிப்பே சொல்கிறது.
கணக்கு வழக்கிலும் தவறுகள் உள்ளன. செலவுகளை எக்செல் கோப்புகளில் வைத்திருந்தார்கள். அதில் நிறைய பிழைகள். ஒரு தவறான சூத்திரத்தால் கிட்டத்தட்ட 250 மில்லியன் பிராங்க் பராமரிப்புச் செலவு கணக்கிலிருந்தே காணாமல் போனது.
முடிவு எடுக்க வேண்டிய உயர்மட்டக் குழுவும் கடைசி இரண்டு கூட்டங்களை ரத்து செய்தது. அதனால் பெரிய முடிவுகள் நின்றுபோயின. இராணுவத்துக்கும் இந்த அலுவலகத்துக்கும் இடையே கருத்து வேறுபாடும் உள்ளது. ஆயுதங்களுக்குப் பணம் மிச்சப்படுத்த, சில சுற்றுச்சூழல் மற்றும் சட்ட விதிகளைத் தளர்த்த வேண்டும் என்று இராணுவம் கேட்கிறது.
நிதிக் கண்காணிப்பு அலுவலகம் 4 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சு, Armasuisse, இராணுவத் தலைமை மூவரும் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். சில பிரச்சினைகளை ஏற்கெனவே சரிசெய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
மூலம்: RSI
புகைப்படம்: Henry Becker / Unsplash





