
பண்டாரவளை உள்ளக அரங்கில் செப்டம்பர் 11 முதல் 14 வரை நான்கு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற 40வது அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டியில் (40th All Island School Games Wrestling Championship), மட்டக்களப்பு சிவானந்தா தேசிய வித்தியாலய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பலமான பாடசாலை அணிகளுக்கு மத்தியில், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் அபார திறமையையும், துணிச்சலையும், அசைக்க முடியாத போராட்ட குணத்தையும் வெளிப்படுத்திய சிவானந்தா வித்தியாலய மாணவர்கள் 13 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து முதன்முறையாக இச்சாம்பியன் கிண்ணத்தைச் சூடினர். இப்போட்டியில் 10 புள்ளிகளைப் பெற்ற மொரட்டுவை Prince of Wales’ College இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அத்துடன், 15 வயதுக்குட்பட்ட மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் பதிவு செய்த சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய அனைத்து மாகாணங்களையும் பின்னுக்குத் தள்ளி கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த மல்யுத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

மாணவர்களின் தொடர்ச்சியான பயிற்சி, கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் பயிற்சியாளர்களின் சிறப்பான வழிகாட்டலுக்குக் கிடைத்த சான்றாக அமைந்துள்ள இவ்வரலாற்று வெற்றி, சிவானந்தா தேசிய வித்தியாலயத்திற்கு மட்டுமல்லாது வீரம் விளைநிலமாம் மட்டக்களப்பிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. வரலாற்றுச் சாதனை படைத்த வீர மாணவர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், பாடசாலை நிர்வாகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!





