தமிழீழம்

இலங்கையில் காணாமல் போன 31 பேரை கண்டுபிடித்த ஓ.எம்.பி! – இழப்பீடு குறித்து விரைவில் தீர்மானம்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , 31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும் , 5, 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த, நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா மற்றும் மிராக் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்ட ஊடக சந்திப்பு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

குறித்த ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ‘எமக்குக் கிடைக்கப்பெற்ற 23,352 விண்ணப்பங்களில், முப்படையினர் மற்றும் இரட்டிப்பான விண்ணப்பங்களைத் தவிர்த்து 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் இதுவரை 9,819 முறைப்பாடுகளுக்குரிய பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காகக் கோரப்பட்ட சுமார் 2,000 விண்ணப்பங்கள் எமது தலைமை அலுவலகத்தில் உள்ள தேடுதல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஏறத்தாழ 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குக் கடிதங்கள் மூலம் அனுப்பி விவரங்கள் தேடப்பட்டு வருகின்றன.

அதேவேளை, எமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுவரை 31 பேரை நாம் நேரடியாகக் கண்டுபிடித்துள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

அத்துடன் இடைக்கால நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்குச் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவானது இழப்பீடு அல்ல, அது காணாமல் போன ஆட்களில் தங்கியிருப்பவர்களுக்கான வாழ்வாதார உதவியாகும்.

உரிய இழப்பீட்டை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தற்போதைய அரசாங்கமும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட குழுவொன்றை நியமித்துள்ளனர்.

அக்குழுவின் பரிந்துரைகள் கிடைத்த பின்னர் இழப்பீடு வழங்கும் முறை குறித்துத் தீர்மானிக்கப்படும்’ எனவும் குறிப்பிட்டனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button