
யாழ்ப்பாணம்:
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நிலக்சனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அவரது பெற்றோர், உறவினர்கள், சக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
சம்பவ பின்னணி
யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் மாணவரும், ‘சாரளம்’ சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
அக்காலகட்டத்தில் யாழ்ப்பாண குடாநாட்டில் கடும் இராணுவ ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த நிலையிலேயே இப்படுகொலை நிகழ்ந்தது.





பெற்றோரின் சாட்சியம்
இச்சம்பவம் குறித்து நிலக்சனின் பெற்றோர் வழங்கிய துயர்மிகு வாக்குமூலத்தில்:
விடிகாலை 5.30 மணியளவில் கொக்குவிலில் உள்ள எமது வீட் டின் முன்புறக் கதவை ஏறிப் பாய்ந்து கடந்து மூவர் உள்ளே வந்தனர்.
அவர்கள் வீட்டின் கதவைத் திறக்கும்படி கோரினர்.
நாம் மறுத்தோம்.
வந்தவர்கள் கதவை உடைத்துத் திறந்து உள்ளே புகுந்தனர்.
எமது இரு மகன்மாரினதும் பெயர்களைக் கேட்டனர்.
நாம் பெயர்களைக் கூறினோம்.
இளைய மகனான நிலக்ஷனுடன் தாங் கள் பேச வேண்டியுள்ளது எனத் தெரிவித்து அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
எங்களை வீட்டுக்கு வெளியே வரக்கூடாது என்றும் அவர்கள் பணித்தனர்.
வீட்டு “போர்ட்டிக்கோ’வில் வைத்து அவர்கள் உரையாடும் சத்தம் கேட்டது.
சிறிது நேரத்தில் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முன் “கேற்’றைப் பாய்ந்து ஓடினார்கள்.
மகன் சுடுபட்டு விழுந்து கிடந்தார்.
வந்தவர்களில் ஒருவர் நீளக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தார்.
மற்றைய இருவரும் அரைக் காற்சட்டையும் சேட்டும் அணிந்திருந்தனர்.
யாழ்ப்பாண குடாநாட்டில் இராணுவ ஊரடங்கு அமுலிலிருந்த 01 ஆம் திகதி ஆவணி 2007 அதிகாலை பொழுதில் வீட்டில் பெற்றோருக்கு முன்னால் படுகொ*லை செய்யப்பட்ட சகாதேவன் நிலக்சன் அவர்களின் தந்தையார் தனது மகன் கொ*லை தொடர்பாக இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
நீதி மறுப்பும் குற்றச்சாட்டுகளும்:
படுகொலை செய்யப்பட்டு 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இதுவரையில் குற்றவாளிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2005-2009 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற விடயங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர் அக்காலகட்டத்தில் யாழ். கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி உள்ளிட்ட உயர் இலங்கை இராணுவ அதிகாரிகளே இத்தகைய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் எனத் தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.
எனினும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ உயரதிகாரிகளுக்குப் பிந்தைய அரசாங்கங்களால் வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை வங்கி இயக்குநர் சபை உறுப்பினர் மற்றும் விமான நிலைய அமைப்பின் தலைவர் போன்ற உயர் பதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதாகச் ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், இராணுவப் படைகள் மீதான கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கும், அப்போதைய இராணுவ ஒட்டுக்
குழுக்களின் தலைவர்களாகச் செயற்பட்ட பிள்ளையான் எல்லாவற்றையும் சுமத்தி நாடகமாடுகின்றார்கள் எனவும் மற்றும் இது போதாதென்று வடக்கில் இராணுவத்தின் கருவியாகவிருந்த டக்ளஸ் தேவானந்தா வரை திட்டமிட்டு பாதுகாக்கின்றார்கள்.
என பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
#JusticeForNilakshan #JournalistSafety #MediaFreedomLK #JaffnaPress #HumanRights #SriLankaWarCrimes #JournalistMurder #TamilJournalist #ViduthalaiFM #SwissTamilInfo #SwissTamil #விடுதலைFM #சுவிஸ்தமிழர்தகவல்மையம்





