
மார்ட்டினி (சுவிற்சர்லாந்து ): உலகத் தமிழினத்தின் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தல் நிகழ்வு, சுவிட்சர்லாந்தின் வலே (Valais) மாநிலத்தில் உணர்வுப்பூர்வமாக நடத்தப்படவுள்ளது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில், வலே மாநில தமிழ் இளையோர் ஒன்றிணைந்து நடத்தும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு, எதிர்வரும் 20.05.2026 (புதன்கிழமை) மாலை 17:00 மணி முதல் மார்ட்டினியில் உள்ள மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் மேல் மண்டபத்தில் (Rue de l’Ancienne-Pointe 16, 1920 Martigny) நடைபெறவுள்ளது.
“No Fire Zone” ஆவணப்படம் மற்றும் கலந்துரையாடல்:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை உலகிற்கு அம்பலப்படுத்திய புகழ்பெற்ற “No Fire Zone” ஆவணப்படம் இந்நாளில் திரையிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, சமகால அரசியல் மற்றும் நீதிக்கான நகர்வுகள் குறித்த விசேட கருத்தரங்கமும், வலே மாநில இளையோர்களுக்கு இடையிலான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.

இது குறித்து ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:
“முள்ளிவாய்க்கால் மண்ணில் அநியாயமாக உயிர்நீத்த எமது தொப்புள்கொடி உறவுகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்தி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது புலம் பெயர் வாழும் ஒவ்வொரு தமிழரதும் வரலாற்று கடமையாகும். எமது உரிமைக் குரலையும், நீதிக்கான தேடலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் இளையோர் அனைவரும் இந்த நினைவேந்தல் மற்றும் ஆவணப்படத் திரையிடல் நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளுமாறு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலதிக தொடர்புகளுக்கு: +41 79 358 71 57
+41 78 208 99 64





