இலங்கை

ஐரோப்பிய ரீதியாக இடம்பெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் 2025 ஆண்டு தேர்வு.

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2025

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 24வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.2025) பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.

09 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம் ஆற்றுகைத்தரம், நட்டுவாங்கத் தேர்வு வரை நடாத்தப்பெற்ற இத்தேர்வில் நடனம் – பரதம், இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, சுரத்தட்டு, புல்லாங்குழல்), மிருதங்கம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல நூறு மாணவர்கள் தோற்றியிருந்தார்கள்.

பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம், கலை பண்பாட்டுக்கழகம் ஜேர்மனி, தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆகிய கல்வி நிறுவனங்களின் முழுமையான ஆதரவுகளுடன் நாடுகள் நிலையில் தேர்வுகளிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேர்வு நடுவர்களாக ஆற்றுகைத்தரத்தினை நிறைவுசெய்த வளர்ந்துவரும் இளம் தமிழ்க்கலை ஆசிரியர்கள், முதுநிலை தமிழ்க்கலை ஆசிரியர்கள், நாடுகள் நிலை ஒருங்கிணைப்பாளர்கள், கல்விப்பணியக பொறுப்பாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கடமையாற்றியிருந்தார்கள்.

குறிப்பாக பிரதம, துணை மேற்பார்வையாளர்களாக ஆற்றுகைத்தரத்தினை நிறைவு செய்த இளம் ஆசிரியர்கள் கடமையாற்றியதுடன் தங்கள் பணியினை சிறந்த முறையிலும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

தேர்வு சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அறிமுறைத் தேர்விற்குத் தோற்றிய மாணவர்களிற்கான செய்முறைத்தேர்வுகள் இம்மாத இறுதிப்பகுதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு வைகாசி மாதம் வரை நாடுகள் நிலையில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்க்கலையினை ஆர்வத்துடன் கற்று அறிமுறைத் தேர்விற்கு தோற்றிய மாணவர்கள் அனைவரிற்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.

தகவல்:
நாகராஜா விஐயகுமார் (சங்கர்)
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button