
சுவிட்சர்லாந்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை எந்த நிலையில் இருந்து கற்பிக்க வேண்டும் என்பது தொடர்பான சீர்திருத்தம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஒற்றுமைக்காக சிறு வயதிலேயே மொழிக் கல்வி அவசியம் என இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், கூட்டாட்சி முறையைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய-வலதுசாரி ராடிக்கல்-லிபரல் கட்சி வலியுறுத்துகிறது.
ஜூன் 12ஆம் தேதி, புதிய மொழிச் சட்டத்துக்கான இரண்டு முன்மொழிவுகளை சுவிஸ் மத்திய அரசு ஆலோசனைக்காக முன்வைத்தது. இந்த ஆலோசனைக் காலம் திங்கட்கிழமையுடன் நிறைவடைந்தது.
தொடக்கப் பள்ளியிலேயே ஒரு தேசிய மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்பிப்பதா அல்லது தொடக்கப் பள்ளி முதல் கீழ்நிலை இரண்டாம் நிலைக் கல்வி முடியும் வரை இரண்டாவது தேசிய மொழியையும் தொடர்ந்து கற்பிப்பதா என்பதே முக்கிய விவாதமாக உள்ளது.
பசுமைக் கட்சி முதல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளை, மாற்றம் அவசியம் எனக் கருதப்பட்டால் சமூக ஜனநாயகக் கட்சி இரண்டாவது திட்டத்தை ஆதரிக்கிறது.
ஆனால் ராடிக்கல்-லிபரல் கட்சி இந்த இரண்டு திட்டங்களையும் நிராகரித்துள்ளது.
சுவிஸ் ஆசிரியர்களோ, இரண்டாவது தேசிய மொழியை தொடக்கப் பள்ளியிலிருந்தே கற்பிக்கும் திட்டத்துக்குஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், கற்பித்தல் இலக்குகளை மாற்றியமைப்பதுடன் போதிய நிதியுதவியும் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
காண்டன்களிடையிலும் இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக, ஃப்ரிபோர்க் மற்றும் வலேஸ் காண்டன்கள் தொடக்கப் பள்ளியிலேயே ஒரு தேசிய மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் முதல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் பல காண்டன் நாடாளுமன்றங்கள், பிரெஞ்சு மொழிக் கல்வியை தொடக்கப் பள்ளியில் இருந்து நீக்கி, இரண்டாம் நிலைப் பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும் என விரும்புகின்றன.





