
சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டுக்கான அதிக எடை கொண்ட பூசணிக்காய் 651.5 கிலோ எடையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சூரிச் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இந்தப் பிரம்மாண்ட பூசணிக்காய் வளர்க்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் இதே விவசாயியே சுவிஸ் பூசணிக்காய் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த மாபெரும் பூசணிக்காய் Atlantic Giant வகையைச் சேர்ந்தது.
புளோரியன் இஸ்லர் இந்தப் போட்டியில் மேலும் மூன்று சுவிஸ் சாதனைகளையும் படைத்துள்ளார். 136.6 கிலோ எடையுள்ள Bushel Gourd, 7.695 மீட்டர் உயரமுள்ள சூரியகாந்திச் செடி மற்றும் 97.2 கிலோ எடையுள்ள தர்பூசணிஆகியவற்றுக்கான சுவிஸ் சாதனைகளை அவர் பதிவு செய்துள்ளார்.

காய்கறிகளில் உலக சாதனைகளும்
இந்தப் போட்டியில் ராட்சத காய்கறிகளுக்கான மேலும் சில சுவிஸ் மற்றும் உலக சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
டெட்லிகோனைச் சேர்ந்த மையர் குடும்பம், ஒரே கிழங்காக அதிக எடை கொண்ட இனிப்பு உருளைக்கிழங்குக்கான உலக சாதனையைப் படைத்துள்ளது. அந்த உருளைக்கிழங்கு 13.6 கிலோ எடை கொண்டது.
அதேபோல், டோஸ்விலைச் சேர்ந்த யூர்க் விஸ்லி, 54.3 சென்டிமீட்டர் நீளமுள்ள மிளகாயை வளர்த்து, உலகின் மிக நீளமான மிளகாய்க்கான சாதனையை முறியடித்துள்ளார்.
18 ராட்சத பூசணிக்காய்கள்
பேக்லிஹோஃப் பண்ணையில் மொத்தம் 18 பிரம்மாண்ட பூசணிக்காய்கள் எடை போடப்பட்டன.
இந்தப் போட்டியில் 16 அணிகள் பதிவு செய்திருந்தன. அவற்றில் இரண்டு விவசாயிகள் குழுக்களும், இரண்டு குடும்பங்களும் இடம்பெற்றிருந்தன.
எடை போடப்பட்ட 18 பூசணிக்காய்களில் 14 ஆரஞ்சு நிற Atlantic Giant வகையைச் சேர்ந்தவை. மற்ற நான்கு பச்சை நிற ஸ்குவாஷ் வகையைச் சேர்ந்தவை.
சுவிட்சர்லாந்தில் இதுவரை பதிவான அதிக எடையுள்ள பூசணிக்காயின் சாதனை 1,054 கிலோ ஆகும். உலக சாதனை 1,278.8 கிலோ ஆக உள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது, இந்தப் பிரம்மாண்ட காய்கறிகள் அனைத்தும் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தின் உதவியுடன் எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்டன.





