சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் இவ்வருடம் 14.8 கோடி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் பதிவு

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டு இதுவரை 14.8 கோடிக்கும் அதிகமான தேவையற்ற அதாவது அநாமதேய தொலைபேசி அழைப்புகளுக்குதொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆண்டின் இறுதிப் பகுதியில் இதுபோன்ற மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகள் மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Swisscom, போலியான தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ‘ஸ்பூஃபிங்’ அழைப்புகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் என மொத்தம் 10.2 கோடி அழைப்புகளை பதிவு செய்துள்ளதாக Keystone-ATS செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 6.5 கோடி அழைப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், 3 கோடி அழைப்புகளின் எண்கள் மறைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 70 இலட்சம் அழைப்புகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனமான Sunrise, ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 4.6 கோடிக்கும் அதிகமான அழைப்புகளை தடுத்தது, அடையாளம் தெரியாதவையாக மாற்றியது அல்லது சந்தேகத்திற்குரியவை எனக் குறியிட்டதாக வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 20% அதிகமாகும்.

Salt நிறுவனமும் தேவையற்ற அழைப்புகளைத் தடுக்கும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் உள்வரும் அழைப்புகளில் சராசரியாக 5 அழைப்புகளில் 2 அழைப்புகள் தடுக்கப்படுகின்றன.

போலி தொலைபேசி எண்கள் மூலம் மோசடி

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பாக ‘ஸ்பூஃபிங்’ எனப்படும் மோசடி முறையைத் தடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த முறையில், அழைப்பவர் பயன்படுத்தும் உண்மையான எண்ணுக்குப் பதிலாக வேறு ஒருவருடையது அல்லது போலியான தொலைபேசி எண் அழைப்பைப் பெறுபவரின் திரையில் காட்டப்படும்.

இந்த ஆண்டின் தொடக்கம் முதல், வெளிநாடுகளில் இருந்து சுவிஸ் தொலைபேசி எண் போன்று போலியாகக் காட்டப்படும் எண்களைக் கொண்ட அழைப்புகள் கட்டாயம் தடுக்கப்பட வேண்டும் அல்லது “அழைப்பாளர் யார் என்பது தெரியவில்லை” என்ற எச்சரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது.

மோசடியாளர்களுடன் தொடரும் ‘பூனை–எலி’ ஆட்டம்

எனினும், மோசடியாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களை மிக வேகமாக மாற்றுவதால், இந்த நடவடிக்கைகளின் செயல்திறன் குறைந்து வருவதாக Salt நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு உதாரணமாக Sunrise சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சுவிஸ் தொலைபேசி எண்ணை போலியாகப் பயன்படுத்தியதாக அல்லது தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட 1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு அழைப்புகள் எச்சரிக்கைக்குரியவை எனக் குறியிடப்பட்டுள்ளன.

ஆண்டின் இறுதிப் பகுதியில் தேவையற்ற அழைப்புகளின் எண்ணிக்கை பொதுவாக அதிகரிப்பதாக Sunrise தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக தொலைபேசி ஒப்பந்தங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களின் காலாவதி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மோசடியாளர்கள் தங்கள் முறைகளை மாற்றி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தடுப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்கக்கூடும் என்பதால், குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டாம் என Swisscomமுடிவு செய்துள்ளது.

“ஸ்பூஃபிங்கைத் தடுப்பதற்கான போராட்டம் தொடர்ந்து பூனைக்கும் எலிக்கும் இடையிலான ஆட்டம் போன்றே உள்ளது” என Swisscom நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button