
சுவிட்சர்லாந்தில் வாடகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய முன்மொழிவைத் திரும்பப் பெறுமாறு கோரி, 100,848 பேர் கையெழுத்திட்ட மனுவை சுவிஸ் வாடகைதாரர் சங்கம் மத்திய அரசிடம் கையளித்துள்ளது.
அதிகமாக உள்ள வாடகைகளை மறுபரிசீலனை செய்து தானாகக் குறைப்பதற்கான ஏற்பாடுகளை வலியுறுத்தும் வாடகை முன்முயற்சிக்கு மாற்றாக, அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முன்மொழிவின்படி, ஒரு வீட்டின் ஆரம்ப வாடகையை அதே பகுதியில் உள்ள ஒத்த வீடுகளின் வாடகையுடன் ஒப்பிட்டு மாற்றியமைக்க முடியும். ஆனால், புதிய மற்றும் அதிக வாடகைகளும் இந்த ஒப்பீட்டுக் கணக்கில் சேர்க்கப்படுவதால், வாடகை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வாடகைதாரர் சங்கம் எச்சரித்துள்ளது.
மேலும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்றும், வாடகையை மறுபரிசீலனை செய்வதற்கான ஏற்பாடு இதில் இல்லை என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வாடகைதாரர்கள் ஏற்கனவே அதிக தொகையைச் செலுத்தி வருவதாகத் தெரிவித்த சங்கத் தலைவர் கார்லோ சொமருகா, சந்தை விலையை அடிப்படையாகக் கொண்ட வாடகைக்குப் பதிலாக, செலவுகளின் அடிப்படையில் நியாயமான வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





