சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் குறித்து பொதுமக்களும், நாட்டின் மாநிலங்களும் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுவிஸ் செனட் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்களுக்கு பொதுமக்களின் எளிய பெரும்பான்மை மட்டும் போதுமானதாக இருக்கும் வகையில், விருப்ப வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற மத்திய அரசின் முன்மொழிவு செனட்டில் 23 வாக்குகளுக்கு 17 வாக்குகள் என்ற கணக்கில் நிராகரிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
அதன்பின்னர், அதேபோன்ற வாக்கு வித்தியாசத்தில் “sui generis” எனப்படும் சிறப்பு வகை வாக்கெடுப்பைநடத்துவதற்கு செனட் ஆதரவு தெரிவித்தது. இதன்படி, ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மாநிலங்களின் பெரும்பான்மை ஆதரவு தேவைப்படும். ஆனால், இதற்காக அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியதில்லை.
சுவிஸ் அரசியலமைப்பில் இதற்கான கட்டாய விதி இல்லாவிட்டாலும், ஒரு சர்வதேச ஒப்பந்தம் “அரசியலமைப்புத் தன்மை கொண்டது” எனக் கருதப்படும் பட்சத்தில், நடைமுறையில் அது கட்டாய வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படலாம். சர்வதேச ஒப்பந்தங்களுக்கான இந்த நடைமுறை “sui generis” கட்டாய வாக்கெடுப்பு என அழைக்கப்படுகிறது.
மேலும், செனட்டின் அரசியல் நிறுவனங்களுக்கான குழு முன்வைத்த மற்றொரு முன்மொழிவுக்கும் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களுக்கு அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஒப்புதல் பெறுவதால், மக்களும் மாநிலங்களும் என இருதரப்பினரின் பெரும்பான்மை ஆதரவும் தேவைப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள் விருப்ப வாக்கெடுப்புக்கா அல்லது கட்டாய வாக்கெடுப்புக்காஉட்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதத்துக்குப் பின்னரே செனட் இந்த முடிவை எடுத்துள்ளது.
சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு வாக்கெடுப்பில் மக்களின் பெரும்பான்மை மட்டும் போதுமானதாக இருக்கலாம் அல்லது மக்களும் மாநிலங்களும் இருவரின் பெரும்பான்மையும் தேவைப்படலாம்.
செனட் நிறைவேற்றிய இந்த இரண்டு முன்மொழிவுகளையும் தற்போது மக்கள் பிரதிநிதிகள் சபை பரிசீலிக்க வேண்டும்.
அத்துடன், பொதுமக்களின் எளிய பெரும்பான்மை போதுமானதாக இருக்கும் வகையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவும் மக்கள் பிரதிநிதிகள் சபையில் மீண்டும் விவாதத்திற்கு வரவுள்ளது.





