
சூரிச்
சுவிற்சர்லாந்தில் வசிக்கும் பிரபல மொழிபெயர்ப்பாளரும் கலாச்சார ஒருங்கிணைப்பாளருமான வின்ஸ்லோஸ் அன்ரனி (தமிழ்மாறன்) அவர்கள் எழுதிய ‘வேரிழந்த வாழ்க்கையும் தமிழர் பாதையும்’ (ஆய்வும் பட்டறிவும் வழிகாட்டலும்) என்னும் காத்திரமான நூலின் அறிமுக நிகழ்வு, சுவிஸ் சூரிச் நகரில் கடந்த 20.09.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முற்றிலும் தமிழர் மரபுசார் பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்நிகழ்வு, கலந்துகொண்ட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்விற்கு தகைசால் தமிழ்ப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். ஜப்பான் கக்சுயின் (Gakushuin) பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வுப் பேராசிரியரான முனைவர் ச. மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நூலின் ஆழம் மிக்க அறிமுகவுரையையும் சிறப்புரையையும் ஆற்றினார்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், அவர்களின் அனுபவப் பகிர்வுகள், சமூக வழிகாட்டல்கள் மற்றும் ஆழமான ஆய்வுகளை மையமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
புலம்பெயர் மண்ணில் எமது வாழ்வியலைப் பதிவு செய்யும் இதுபோன்ற நூல்கள், எமது அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய மிக முக்கியமான வரலாற்றுச் சான்றுகளாகும். எனவே, பலரும் தத்தமது பட்டறிவுகளைத் தொகுத்து இது போன்ற ஆவணங்களை வெளிக்கொணர வேண்டும் என்பதே நிகழ்வில் கலந்துகொண்ட பலரதும் ஏகோபித்த விருப்பமாகவும் வேண்டுதலாகவும் அமைந்தது.
இந்நிகழ்வில் மதகுருமார், சுவிஸ் வாழ் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், நூலாசிரியரின் நீண்டகால உழைப்பையும் பங்களிப்பையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.






