1987 அக்ரோபர் 21,22ஆம் திகதிகளில் யாழ் பொது வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 75ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்தப் படுகொலையை எம் இளையவர்களின் மனங்களிலிருந்து அகற்றுவதற்காக, அதனை நேரடியாகப் பார்த்த மக்களின் மனங்களை மாற்றமுடியும் என்ற வஞ்சக என்னத்தோடு தனது கைக்கூலிகளை வைத்து இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து 21.10.2023 சந்தோஸ்நாராயணனின் இசை நிகழ்ச்சியை யாழ் நகரில் நடத்தியிருக்கின்றது. இதனை எம் இளையவர்களும் மக்களுமாக இணைந்து புறக்கணிக்காமல் இந்திய அரசின் கொடிய வலையில் வீழ்ந்துள்ளனர்.

இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள், வன்கொடுமைகள் ஈழத்தமிழர்கள் மனங்களில் மாறாத வடுக்களாக பதிந்துள்ளன . சிங்கள பேரினவாத இராணுவம் இறுதிப் போர் வேளையில் மருத்துவமனைகள், பொதுமக்கள் வாழிடங்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்றொழிக்கும் முறையை முதலில் கற்றுக்கொண்டது, இந்திய இராணுவத்திமிருந்துதான்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் புரிந்த படுகொலைகளும் அவ்வளவு கொடூரமான இழிவானசெயலே

தமிழ் ஆண்கள் பெண்களை கண்டாலே சுட்டுக்கொல்வது, எரிப்பது, உயிர்போகும் வரைக்கும் தாக்குவது அத்தனை குற்றங்களையும் அட்டூழியங்களையும் வடக்கு, கிழக்குதமிழர் தாயகத்தில் இந்திய சிறிலங்கா இராணுவப்படைகள் செய்தன. தமிழர்களை எப்படியெல்லாம் இனப்படுகொலை செய்யலாம் என்பதை சிறிலங்கா அரச படைகளுக்கு கற்றுக்கொடுத்ததும் இந்திய இராணுவம்தான் 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலை புரிந்த ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் இடம்பெற்ற நாள்.

யாழ்.கோட்டையிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவம் நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தது. முதற்கட்டமாக மருத்துவ விடுதிக்குள் நுழைந்த படைகள் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுத்துக்கிடந்த நோயாளர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது. எஞ்சிக் கிடந்து கெஞ்சியோர் மீதும் யன்னல்களுக்குள்ளால் கைக்குண்டுகளை வீசிக் கொன்றனர்.

தாம் மருத்துவர்கள், தாம் தாதியர் என பதவிக்குரிய ஆடைகளையும், ஆவணங்களையும், உபகரணகளையும் இராணுவத்துக்குக் காண்பித்தபடியே மக்களைக் காப்பாற்ற மருத்துவ விடுதிக்குள் நுழைந்த மருத்துவர்களைக் கூட இந்திய அமைதிப்படை விட்டுவைக்கவில்லை.அனைவரையுமே சுட்டுக்கொன்றது. மருத்துவமனைக்கு உயிர்காக்க சென்றவர்கள், உயிருடன் திரும்பிவருவார்கள் எனக் காத்திருந்தவர்களுக்கு அவர்தம் இறுதி அஸ்தியைக்கூட கொடுக்க முடியாதளவுக்கு அட்டூழியம் புரிந்து விட்டு யாழ்.போதனா வைத்தியசாலையை விட்டு வெளியேறின இந்தியப் படைகள்.

இன்று காசாவில் இஸ்ரேல் படைகள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வாழிடங்கள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் வகைதொகை கொலைகளுக்கும், அன்று இந்தியா மற்றும் சிறிலங்கா இராணுவம் ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த வன்கொடுமைகளுக்குமிடையில் கடுகளவு வித்தியாசம் கூட இருக்கவில்லை. துப்பாக்கிளும் போரும் தவிர்க்கப்படவேண்டிய இடங்களில் வைத்திய சாலை முதன்மையானது. வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான அறிவிப்புபலகைகள் மற்றும் ஆயுதத்தடைக்குறியிடுகள் வைக்கப்பட்டிருக்கும். உயிரை காக்க வேண்டிய மருத்துவமனைக்குள் உயிர் குடித்தனர் இந்தியப் படைகள். அமைதி காப்பதற்காக வந்ததாக கூறிய படைகள் உயிர்களை பாதுகாக்க வேண்டிய அமைதி வலயமாக மதிக்க வேண்டிய வைத்தியசாலையை போர்க்களமாக்கினர்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் தர்மத்தை ஈழத்தில் மீறியவர்களே இந்திய மற்றும் சிறிலங்கா படையினர் ஈழத்தமிழ் இனப்படுகொலை விடயத்தில் இந்தியா சிறிலங்காவை ஊக்குவித்தது. அதைப் போலவே வைத்தியசாலைகள்மீது தாக்குதலை நடத்தும் விடயத்திலும் இந்தியாவே சிறிலங்கா படைகளுக்கு முன்னோடி. ஜெயவர்த்தன தொடக்கம் மகிந்த ராஜபக்ச வரையான அரசாங்கத்தில் தமிழர் தாயகத்தில் வைத்தியசாலைகள் மீது சிறிலங்கா இராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களை எவரும்மறக்க முடியாது. சிறிலங்கா படையால் 2008,2009 காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் தற்காலிக மருத்துவமனைகளாக இயங்கியதில்இருந்து.

நிரந்தர மருத்துவமனைகளாக இருந்தவை மீதும் திட்டமிட்ட வகையில் படுகொலை நடத்தி சிறிலங்கா அரசாங்கம் வான்படை தாக்குதல்களையும் நிகழ்த்தியது. சந்திரிக்கா அரசாங்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலால் பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள் கூட மண்ணில் புதைந்தனர். குழந்தையை பெற்றெடுக்க வைத்தியசாலை வந்த தாய்மாரும் குழந்தைகளும் ஒன்றாக விமானக் குண்டுகளினால் மண்ணில் புதைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலை எவராலும் மறக்க இயலாது.

இதைப்போல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீதும் கொடும் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். போரால் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் பரவியிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை சிறிலங்கா படைகள் பிண வைத்தியசாலையாக மாற்றினர்.

மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட மனிதகுலத்திற்கு விரோதமான இப் படுகொலைகளுக்காக இதுவரையில் இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன் இப் படுகொலைகளை தாம் புரிந்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை. ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டமைக்கான நீதி கோரும் காலத்தில், இந்திய அரசு ஈழத்தில் மேற்கொண்ட படுகொலை நடவடிக்கைகளுக்கு என்ன நீதி கிடைத்தது.

இவ்வாறான நிலைமையில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ்உறவுகளை வருடந்தோறும் நினைவுகூரப்பட்டு வருகிறநாளில் சாந்தோஷ்நாராயணன் இசைநிகழ்ச்சிகளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை இன்றும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு உள்வாங்கப்பட்டு கொண்டிருக்கும் தமிழ்மக்களால் தவறாகவே பார்க்கப்படும் என்பதை சாந்தோஷ் நாராயணன் விளங்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய துயர் மிகுந்த நாட்களில் நினைவேந்தல்கள் ஊடாக அடுத்த தலைமுறையினருக்கு தமிழின போராட்டங்கள் சென்றடையும் நிலைமையில் இதனை குழப்பும் நோக்கில் இந்த நாட்களை வெறும் களியாட்ட நிகழ்வுகளாக மாற்றி இளைஞர்களை பலிக்காடாக இந்திய அரசு முயன்று கொண்டிருக்கிறது.இளைஞர்களை திசைதிருப்பி படுகொலை நாட்களை மூடிமறைக்க இத்தைய களியாட்டங்களை படுகொலை நாட்களில் நடத்த தீர்மானித்துள்ளது, மற்றைய நாட்களில் இசை நிகழ்சி நடத்தாமல் இந்த நாளில் நடத்தும் போது சாந்தோஷ் நாராயணன் மீது ஈழத்தமிழ் மக்கள் தவறான அபிப்பிராயம் கொள்ளுகின்ற நிலையே ஏற்பட்டுள்ளது. இந்திய அரசின் இத்தைய செயலுக்கு சிங்கள பேரினவாத அரசும் உடந்தையாக நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்