1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.


இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது.

பல நாட்களாக திலீபனுடன் சேர்ந்து நானும் எனது நண்பர்களும், முழுமையான தூக்கமில்லாமல் இருந்ததால் இன்று மிகுந்த சோர்வுடன் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். மாறன், ராஜன், தேவர், இரு நவீனங்கள், மாத்தயா, திலீபனின் அண்ணன் இளங்கோ, எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு தூங்கினோம். பன்னிரண்டு நாட்கள் உடல்களைச் சாறாகப் பிழிந்தெடுத்த அசதித் தூக்கமின்றி, அது வேறொன்றுமில்லை. மேடைக்கு முன்னே அமர்ந்திருந்த ஒருவர் என்னை வந்து தட்டி எழும்பியதும் நான்தான் முதலில் திடுக்கிட்டு எழும்பினேன். கும்மிருட்டில் என்ன செய்வதென்று தெரியாமல். “நவீனன்……” என்று அழைத்தபடி திலீபனின் கட்டிலில் கையை வைத்தேன். அவர் ஆடாமல் அசையாமல் படுத்திருந்தார். அதனால் மனம் அமைதியடைந்தது. அவரின் உடல் ‘ஜில்’ லென்று பனிக்கட்டியைத் தொடுவது போல் குளிர்ந்து காணப்பட்டது.

மனம் ‘பட பட’ வென்று அடிக்கத் தொடங்கியது… மீண்டும் ‘நவீனன்” என்று அழைத்தேன். நவீனன் எழும்பி விட்டான். ஐந்து நிமிடங்களில் மேடையில் ஒரு பெரிய மெழுவர்த்தி எரியத் தொடங்கியது… மெழுகுவர்த்தியின் ஒளியிலே திலீபனின் முகம் நன்றாகத் தெரிந்தது… ஒரே வினாடிதான்! அதற்குள் அந்த மெழுகுவர்த்தி காற்றின் வேகத்தினால் அணைந்துவிட்டது. பலத்து வீசிய காற்று அதை மீண்டும் எரிய விடுமா? என்பது சந்தேகமாகத்தான் இருந்தது….. ஆனால், ஐந்து நிமிடங்களில் மின்சாரம் வந்துவிட்டது… திலீபனின் நிலை எல்லையைக் கடந்துவிட்டது என்பது எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. அதனால், என்மீதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது… நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். கணிக்க முடியவில்லை…. மிகவும் மெல்லியதாக அடிக்கிறது…. உடனே இரத்த அழுத்தத்தைக் கணிக்கின்றேன்… அது மிகவும் குறைவாக இருக்கிறது… 50ஃ? என்ற நிலையில் ஒரு நோயாளியால் இன்னும் எத்தனை மணித்தியாலங்கள் உயிர் வாழ முடியும் என்பது எனக்குத் தெரியும். உலகமே தலைகீழாகச் சுற்றுவது போல் இருந்தது.

திலீபன் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. ‘வாஞ்சி அண்ணை! எனக்கு என்ன நடந்தாலும் நீங்கள் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட பலவந்தமாகவோ, சுய நினைவற்ற நிலையிலோ தர முயற்சிக்கக்கூடாது… அப்படி என் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் நான் இறக்குமட்டும் எனக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக் கூடாது… சுயநினைவோடு என்றாலும் சரி… சுய நினைவில்லை என்றாலும் சரி…. இதுக்குச் சம்பதிக்கிறனெண்டு சத்தியம் செய்து தாருங்கோ…” என்று விடாப்பிடியாக நின்று என்னிடம் சத்தியம் வாங்கிய பிறகுதான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி;த்தார் அவர். அப்படியிருக்க, அவர் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவருக்குச் சிகிச்சையளிப்பேன்? எப்படி அவருக்கு நீர் ஊட்டுவேன்? மனிதநேயத்தையும் – அதன் தார்ப்பரியங்களையும் மதிக்கும் ஓர் வைத்திய சேவையாளன் என்ற நிலையைத் திலீபன் விஷயத்தில் நிறைவேற்ற விடாமல் என் கைகளைக் கட்டிப் போட்டது எது?……. எது? ஆம்@ “சத்தியம்!” என்ற இந்த ஐந்து எழுத்துக்களுக்காகத் தானே திலீபன், ” அகிம்சை” என்ற நான்கு எழுத்துக்களைக் கொண்ட போராட்டக் களத்தில் குதித்தான்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று உயரிய அம்சங்களினால் வேரூன்றி வளர்த்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதால், ‘கட்டுப்பாடு’ என்ற நல்வழியிலே கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் திலீபனை என் கண்ணெதிரிலேயே ‘பலி’ கொடுப்பதைத் தவிர, வேறு வழியொன்றும் எனக்குத் தெரியவில்லை. என் கடமையைச் செய்வதற்காக மேடையின் பின்பக்கம் இறங்கிச் செல்கிறேன். அங்கே பிரதித் தலைவர் மாத்தயா நிற்கிறார். அவரிடம் திலீபனின் உடல் நிலையின் அபாயகரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறேன். திலீபனின் உடல் நிலை மோசமாகிவிட்ட விடயம் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் பொதுமக்களும் மேடையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். திலீபனுக்கு கடைசி நிமிடம் வரையும் ஒருவித சிகிச்சையும் அளிக்க முடியாமல் எமது கைகள் கட்டப்பட்டிருந்ததற்கு வேறு முக்கிய காரணமும் ஒன்று இருந்தது. எமது காதில் விழக்கூடியதாகவே பல எதிரணி உறுப்பினர்களும், எமது இயக்கத்துக்கு எதிரானவர்களும் பேசியதைக் காதால் கேட்டவர்களில் நானும் ஒருவன்.

“புலிகள் தந்திரமாக மக்கள் மனத்தை மாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்ற பெயரிலே தண்ணியைக் குடிச்சுக்கொண்டு இருப்பார்கள்… ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் வைத்தியம் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம்… இதுதான் இந்த சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை…” இப்படியான பேச்சுக்களுக்கு உண்மை வடிவம் கொடுத்து, “புலிகள் பொய்யர்கள்” என்ற கெட்ட பெயரை வரவிடாமல் காப்பாற்றுவதற்காகவும் எம்கைகள் கட்டப்பட்டிருந்தனவே தவிர, வேறு ஒன்றுக்காகவும் அல்ல.

எம் கைகள் மட்டும் கட்டுப்படாமல் இருந்திருந்தால், எமது உயிரினும் மேலான, தியாக தீபம் திலீபனை எமது உயிர்களைக் கொடுத்தாவது காப்பாற்றியிருப்போம்…. ஆனால்…… முடியவில்லையே? விதி! தன் வலிய கரங்களை மிக நன்றாகவே திலீபனின் கழுத்தில் இறுக்கிவிட்டான். உயிருடன் அந்த மனித தெய்வம் நீண்ட நேரம் போராடிக் கொண்டிருப்பதை என் கண்களால் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டமைக்காக, நான் வெட்கப்பட்டேன். வேதனைப்பட்டேன். ஆனால், என்ன செய்ய முடியும்? 265 மணித்தியாலங்கள் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடாத்தி முடித்த அந்த தியாகத் திலீபன், இன்று காலை (26.09. 1987) 10.48 மணியளவில், எம்மையெல்லாம் இந்தப் பாழும் உலகில் பரிதவிக்க விட்டுவிட்டுத் தான் மட்டும் போய்விட்டான்.

ஆம்! தமிழர்தம் விளக்கு அணைந்துவிட்டது! அணைந்தேவிட்டது! டொக்ரர் சிவகுமார் அவர்கள், திலீபன் இறந்;த பின் அவரைப் பரிசோதனை செய்து தனது இறுதியான முடிவைச் சொல்லிவிட்டு, திலீபனின் பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்த போது, மக்கள் கதறி அழத் தொடங்கினர்… எங்கும் அழுகைச் சத்தம்…. விம்மல் ஒலி… சோக இசை…. வானமே இடிந்து விட்டதைப் போன்ற வேதனை எல்லோரையும் ஆக்கிரமித்திருந்தது. வானத்து நிலவு கீழே விழுந்து விட்டது போன்ற உணர்வு! காலை 11 மணிக்கு ‘என்பார்ம்’ செய்வதற்காக, அவரது உடலை யாழ். வைத்தியக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றோம். பிற்பகல் 4.15 மணியளவில் திரும்பவும் அதே மேடைக்கு முன்பாக அவரின் புகழுடம்பு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் புள்ளி போட்ட, பச்சையும் – கறுப்பும் கலந்த இராணுவ உடையும், தொப்பியும் திலீபனுக்கு அணியப்பட்டு, ‘லெப்டினன்ட் கேணல்’ என்ற பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் செய்த தியாகத்துக்கு அவருக்கு எந்தப் பட்டமும் தகுதியில்லை, அல்லது ஈடாகாது என்பது எமக்குத் தெரியும்…….

ஆனால், என்ன செய்ய முடியும்? அவரைப் படுக்க வைத்திருந்த பேழையை, விடுதலைப்புலிகளின் சிவப்பு நிறத்திலான கொடி அலங்கரித்திருந்தது. தந்தை, சகோதரங்கள், உறவினர்கள் ஆகியோர் உடலை வந்து தரிசித்துச் சென்றனர். பெட்டியைத் திறந்ததுமே அவரது அன்புத் தந்தையும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, திரு. இராசையா அவர்கள் “ஓ…” என்று அலறியவாறு அவர் உடல்மீது விழுந்து புரண்டு அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகையைத் தொடர்ந்து பொதுமக்களும், சிறு பிள்ளைகளைப் போல் குலுங்கிக் குலுங்கி அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. பொதுமக்கள் மணிக்கணக்காகக் காத்திருந்து, நீண்ட வரிசையிலே வந்து தமது இறுதி அஞ்சலியை மண்ணின் மைந்தனுக்குச் செலுத்தினர். ஈரோஸ் இயக்கத் தலைவர் திரு. பாலகுமார், தமிழகத்திலிருந்து வருகைதந்து தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் தலைவர் திரு. நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலங்கி அழுதவாறு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

தலைவர் பிரபாகரன், சொர்ணம், மாத்தயா, குமரப்பா, புலேந்திரன், சந்தோசம், ஜொனி, பிரபா, இம்ரான், அன்ரன் மாஸ்ரர், சங்கர் அண்ணா, நடேசன் மற்றும் ஏனைய இயக்க உறுப்பினர்களும் தத்தம் இறுதி அஞ்சலியைத் தமது தோழனுக்குச் செலுத்தினர்.

சாஜகான், நரேன், அருணா, சிறி, ராஜன், தினேஸ் போன்றோர் தம்மைச் சமாளிக்க முடியாமல் விம்மி விம்மி அழுதனர்.

திலீபனின் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் அவரின் கூட இருந்து, அவரின் போராட்டத்தில் பங்குபற்றி, வேதனையின் எல்லைக்கே சென்றுவந்த எனக்கு, இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு இன்னும் எத்தனை நாட்கள் தேவையோ நானறியேன்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! திலீபனின் உயிர் அநியாயமாகப் போகவில்லை அதற்குப் பதிலாக அவர் ஒரு படிப்பினையை எமக்குக் கற்பித்து விட்டுப் போயுள்ளார்… அகிம்சைப் போராட்டம் என்பது மனித நேயமும், உயர் பண்பும் மிக்கவர்களிடம்தான் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்… ஆயுதங்கள் தான் எமது தமிழீழப் போராட்டத்தைப் பொறுத்தவரை சரியான பதில் தரமுடியும் என்பதையும், திலீபன் மறைமுகமாக உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார் என்பதே எமது கணிப்பு… அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

That night had broken the dawn with tears. Thileepan’s soul set apart from his body exactly at 10.58 am after 256 hours without a drop of water and food, only with his 5 demand in mind. The bureaucracy has killed him. However, this also turned up into a major uprising among Tamil people. Once again those people led the way in armed struggle.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்