இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது.

‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது. அவர் படுத்திருந்தது சிறிய கட்டில்…. ஆகையால், தேவரிடம் சொல்லி, பெரிய கட்டிலொன்று கொண்டுவரச் செய்து, அதில் திலீபனைப் படுக்க வைத்தோம்.

அப்போதுதான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததைக் காண முடிந்தது. மாறன், நவீனன், தேவர் ஆகியோர் மிகக் கஷ்டப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி, புத்தாடை அணிவித்தனர். அவர் சுயநினைவோடு இருக்கும்போது புது ஆடைகளை அணியும்படி பலமுறை நான் கேட்டபோது, பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“சாகப் போகிறவனுக்கு எதுக்கு வாஞ்சி அண்ணை புது உடுப்பு?” என்று, தனக்கேயுரிய சிரிப்புடன் கேட்டார்…… அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்…

பிற்பகல் 4 மணியளவில் திலீபனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது. ஆம்@ அவர் முழுமையான கோமாநிலைக்கு வந்துவிட்டார்…… மைதானத்தில் கூடியிருந்த சனக் கூட்டத்தினர் திலீபனின் நிலைகண்டு மிகவும் வருந்தினர்….. ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது.

இன்று காலையிலிருந்து, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்து குவிந்து கொண்டிருந்தனர். லொறிகள், பஸ்கள், வான்கள், கார்கள், ஏன்? மாட்டு வண்டிகளிற் கூட அவர்கள் சாரி, சாரியாக வந்து நிறையத் தொடங்கினர். யாழ்ப்பாணத்திலோ, அல்லது இலங்கையின் எந்தப் பகுதியிலோ இதுவரை எந்த நிகழ்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம்போல் நிறைந்ததாகச் சரித்திரமே இல்லை.

வட்டுக்கோட்டையில் இருந்து மட்டும் 50 மாட்டு வண்டிகள் புலிக்கொடிகளை ஏந்தியவாறு, மக்களை நிறைத்துக் கொண்டு வரிசையாக வந்து சேர்ந்தன.

இன்று பிற்பகல் 1.30 மணியுடன் முல்லைத்தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திருச்செல்வம் என்ற விடுதலைப் புலி உறுப்பினர், 60 மணித்தியாலங்களை வெற்றிகரமாகத் தாண்டிவிட்டார்.

மட்டுநகரில் மதன் என்ற விடுதலைப் புலி இன்று காலை 10.40 மணிக்கு, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திலீபனுக்கு ஆதரவாக ஆரம்பித்தார்.

அதேபோல் திருக்கோணமலையிலும் ‘கிருபா’ என்ற போராளி இன்று மாலை ஆரம்பித்துவிட்டார். திருக்கோணமலை. முல்லைத்தீவு, மட்டுநகர் ஆகிய மாவட்டங்களில்தான் கடந்;;த 10 ஆண்டுகளாக, சிறீலங்கா அரசு திட்டமிட்டவாறு சிங்கள மக்களைக் குடியேற்றி வருகின்றது.

1983 ஆம் ஆண்டு கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையிலே படுகொலை செய்யப்பட்ட தமிழர்களில் தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மிக முக்கியமானவர்கள். ஜெயிலிலிருந்த சிங்களக் கைதிகளைத் தூண்டிவிட்டு 52 பேர்களைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது வேறு யாருமல்ல, கனம் ஜே. ஆர். ஜெயவர்த்தனாதான்.

52 பேர்களைத் திட்டமிட்டபடி கொலைசெய்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆயுள் தண்டனைக் கைதிகளும் என்ன பரிசு அளிப்பதென்று ஜே. ஆர். ஒரு வருடமாக மண்டையைப் போட்டு உடைத்தார். கடைசியில் அனைவரையும் அவர்களின் குடும்பங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ‘டொலர் பாம்’, ‘கென்ற் பாம்’ ஆகிய இடங்களில் நவீன வீடுகளைக் கட்டிக்கொடுத்து, குடி அமர்த்தினார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5000 ரூபா பணமும், 2 ஏக்கர் நிலமும், குடியிருக்க வீடும் வழங்கப்பட்டன. இது மட்டுமா? கொலைகாரர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இது வெறும் பொய்யல்ல@ நடந்த உண்மை. என்ன ஆச்சரியம்? உலக வரலாற்றில் எந்த நாட்டிலாவது இப்படி நடந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்ட ஜே. ஆர். என்ன சொல்கிறார் தெரியுமா? தான் உண்மையான ‘காந்தியவாதி’ என்று கூறுகிறார். என்ன கேலிக்கூத்து இது! காந்தீயம் அத்தனை மலிவானதா?

இத்தனை இனத்துவேசியான ஜே. ஆருடன் ‘தமிழர் நலம் காப்பது’ என்ற பெயரில் ஓர் ஒப்பந்தம் செய்வதென்றால், அது நடைபெறக்கூடிய காரியமா? அல்லது நடக்கத்தான் விடுவாரா அந்தக் குள்ளநரி?

ஒப்பந்தம் சரிவர அமுலாக வேண்டும் என்பற்காகத்தான். அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு – திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் “தமிழீழத்தைப் பிரித்துத் தா” என்று கேட்டு உண்ணாவிரதமிருந்தால் அதை எதிர்ப்பதில் நியாயம் உண்டு: இதை ஏன் எதிர்க்கிறார்கள்? புரியவேயில்லை!

நீங்கள் இருவரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தத்தை ஒரு திலீபன் சரிவர நிறைவேற்றும்படி கேட்கிறான். இது நியாயமான கோரிக்கையா இல்லையா….? இதைத் தமிழ் மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று (25.09.87) இலங்கைக் கொம்ய10னிஸ்ட் கட்சியின் வடபிராந்தியக் குழு “இந்திய இராணுவத்தின் அத்துமீறலைக் கண்டிக்கிறோம்.” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்தது. வடக்கும் – கிழக்கும் இணைந்த பிரதேச சுயாட்சியையும், நியாயப10ர்வமான சகல உரிமைகளையும் வழங்க முன்வர வேண்டுமென்று அது தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச் சென்ற எட்டு அப்பாவித் தமிழர்கள் சிங்களக் குடியேற்றவாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

நாளைமுதல் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும், தனியார் நிறுவனங்களும், போக்குவரத்துச் சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து, தமது வேலைகளைப் பகிஷ்கரிக்கப் போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிச் சேவை கடந்த 10 நாட்களாக தினமும் இரவு 7 மணிமுதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.

இன்றிரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத் தொடங்கியது. அவர் சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீபன் சுயநினைவுடன் இருந்தபோது அவரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் ஒன்றை, இன்றிரவு மேடையில் ஒலிபரப்பினார்கள்.

அந்தப் பாடல் எனக்கு மட்டுமன்றி, திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரினது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிட்டது.

ஒ! மரணித்த வீரனே!

உன்ஆயுதங்களை எனக்குத் தா

உன்சீருடைகளை எனக்குத் தா

உன்பாதணிகளை எனக்குத் தா

(ஓ?. மரணித்த)

கூட்டத்திலே சில பெண்கள் இந்தப் பாடலைக் கேட்டதும் விம்மி விம்மி அழத் தொடங்கினர்.

அந்த வேதனைமிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது. இரவே! நீ ஏன் இரக்கமில்லாமல் எமைவிட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்?

– தியாக வேள்வி தொடரும்….

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Day 11: It was difficult to know whether Thiyagi Thileepan was alive or not. He was so weak and tired that he hardly moved. He was in a semi coma. They brought in a bigger bed for him to lie on, and whilst moving him is when they had realised Thileepan had urinated on his bed. They changed clothes for Thiyagi Thileepan. They sang Thileepan´s favorite song: “Oh, dead hero! Give me your weapons. Give me your uniform.” Thileepan fell in coma while listening to the song.

The journey will continue …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்