
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப்போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.
ஆனால், இவர்களில் ஒருவர் ஒருசொட்டு நீர் கூடஅருந்தாமல் 10 நாட்களாக எம் கண் முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே- அப்பப்பா! ….. அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. அத்தனை கொடுமை அது. அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும்.
அதை நான் என் வாழ்நாளில் முதல்முறையாக அனுபவிக்கிறேன். இதையெல்லாம் என் கண்களால் பார்க்கவேண்டும். என்று முன்பே தெரிந்திருக்குமானால், நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன். நான் முற்றுமுழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில்பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடிகள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஓரு நாட்டிடம் நீதிகேட்டு அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், உண்மையிலேயே பாக்கியசாலிதான்.
ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…. அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது… என்ற எண்ணத்தில்தான் மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கைச் செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமாக ஆகிவிடும் என்று நான் கனவுகூடக் கண்டிருக்கவில்லை………… எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?
இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையைப் பார்த்தபோது. நம்பிக்கையே அற்றுவிட்டது.இனி ஓரு நல்ல திர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை ஆஸ்பத்திரிக்கு அனுமதித்தாலும் காப்பாற்ற முடியுமா என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான்.
அப்படியிருக்க……….. கடவுளே! மனித தர்மத்துக்கு கிடைக்கப் போகும் பரிசு இதுதானா?
திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர். என்பது புரிந்துவிட்டது.
அதோ வானத்தில் ஓர் வயோதிப உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவ்வுருவத்தின் தலையிலே மயிரைலே………கண்களிலே வெள்ளை கண்ணாடி ……அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது…அது என்ன?
இரத்தமா?
அந்த “மனிதன்” இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே…… ஏன்?
ஏன்?
ஏன்?
அடுத்து வேறு ஓரு உருவம்!
அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …….. வர்னத்தின் நடுவலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…கருணையைத் தேடுகின்றேன்… ஆனால் காணமுடியவில்லை…
ஏன்…….
ஏன்…..?
இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தவாறு சிறிது சிறிதாக என் கண்களை விட்டு மறைந்து கொண்டிருக்கின்றன….. நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத்தொடங்கி விட்டது.
நாடித்துடிப்பைப் பரிசோதிக்கின்றேன் 52.
இரத்த அழுத்தம் -80/50.
சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ….. அதைநினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது. நெஞ்சே இந்தக் கணமே நீ வெடித்துவிடக்கூடாதா? அன்று திலீபன் கிட்டுஅண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளுர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக் கூறினார்.
“நான் இறப்பது நிச்சயம்…. ஆப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து… தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…”
இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
திலீபன், கிட்டு அண்ணா மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதைப் போல் அவரும் திலீபன் மீது உயிரையே வைத்திருப்பது எனக்குத் தெரியும். கிட்டு அண்ணா யாழ் மாவட்ட தளபதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரும் பாடுபட்டு உழைத்தவர். திட்டமிடும் சாதுர்யம் அதை நிறைவேற்றுவதில் மிகச் சாதுர்யம்… எதிரியைப் பந்தாடுவதில் ராஜதந்திரம். இவற்றுடன் குறிதவறாமல் சுடுவதிலும் தன்னிகரற்றவரான தளபதி கிட்டுவும் , யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவன் திலீபனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம் என்று தான் கூறவேண்டும். இவர்களை உறுப்பினர்களாகப் பெற்ற உறுதி மிக்க தலைவனை நாம் பெற்றுள்ளோம்.
கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்று திலீபன் அன்று மேடையிலிருந்து கூறிய போது அதை நான் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் இன்று…? இந்த நிலையில் அவரது அந்த ஆசை நிறைவேறாமலேயே என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இதை என்றோ ஒரு நாள் கிட்டு அண்ணாவிடம் கூறும் போது அவர் மனம் எவ்வளவு வேதனையடையும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க எனக்கு இந்த உலகத்தின் மீது வெறுப்பு வருகின்றது. இந்த மண்ணிற்காக நாம் எத்தனை அரும்பெரும் உயிர்களையெல்லாம் இழந்திருக்கின்றோம்.
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. தமது துப்பாக்கிகளைச் சிங்கள இராணுவத்திடமிருந்து காப்பாற்றுவதற்காக காயப்பட்டு நடக்க முடியாத நிலையில் தம்மைச் சுட்டுவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடும் படி கட்டளையிட்ட சீலன், ஆனந்தன்…… இயக்க இரகசியங்கள் அடங்கிய முக்கிய விடையங்களையும் கோப்புக்கனையும் காப்பாற்றுவதற்காக கடைசிவரையும் தாக்குப் பிடித்து ரவைகளை மற்றவர்களிடம் எடுத்து அனுப்பிவிட்டு தன் உயிரைத் தியாகம் செய்த ‘பண்டிதர்’.
இயக்கப் போராளிகள் குடியிருந்த இடமொன்றில் வெடிகுண்டின் கிளிப் எதிர்பாராமல் விலகிவிட மற்றவர்களை அந்த அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தன் வயிற்றுக்குள் அமுக்கிக் கொண்டு குப்புறப்படுத்து தன் உடலையே சிதறப்பண்ணி மற்றவர்களை அழிவினின்றும் காப்பாற்றிய தியாக வீரன் ” அன்பு” இவர்களைவிட அவ்வப்போது சிங்கள இராணுவத்திடம் பிடிபடும் நிலையில் இயக்க ரகசியங்களை காப்பாற்றுவதற்காக சயனைட்டைத் தின்று தியாக மரணமடைந்தவர்கள் உலக வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத்தான் ஏராளம் ஏராளம்.
இந்த வழிகளையெல்லாம் விட தன் வழி மிகவும் வேறுபட்டதாக இருக்கட்டும் என்பதற்காக திலீபன் இந்த முடிவிற்கு வந்தார்? இன்று மாலை வசாவிளான் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு ஆதரவாளர் அங்கிருந்து உண்ணாவிரத மேடை வரை தூக்குக் காவடியுடன் அழுதழுது வந்தது எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகும். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடி, அச்சுவேலி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக, மற்றும் சாவகச்சேரி, கொடிகாமம், எழுதுமட்டுவாள் போன்ற இடங்களிலெல்லாம் அடையாள உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் பரந்தளவில் நடைபெற்றது.
பளையிலிருந்து நாவற்குழி வரையுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 6000 மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திய மூக்குமாக ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர். அவர்களின் ஊர்வலத்தில் பார்க்குமிடமெல்லாம் புலிக்கொடிதான் பறந்துகொண்டிருந்தன. நாவந்துறையைச் சேர்ந்த மக்களின் உணர்ச்சி வெள்ளத்தை இன்று வந்த அவர்களின் ஊர்வலத்தின் மூலம் தான் அறியமுடிந்தது. முல்லைத்தீவு மாவட்டமெங்கும் எங்கும் உண்ணாவிரதமும் மறியலும் நடக்காத இடமே இல்லை என்று கூறிவிடலாம்.
‘திலீபன்’ என்ற இந்தச் சிறிய கூட்டிற்குள் இருக்கும் இதயத்தை எத்தனை இலட்சம் மக்கள் தான் நேசிக்கிறார்கள்.”மன்னிக்கவும் இலட்சமல்ல கோடி! தமிழ் நாட்டிலும் ஏன்? ஏனைய ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள தமிழர்கள் எல்லோருமே திலீபனுக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்றார்கள்.
பயணம் தொடரும்……..
Day 10: Thileepan´s condition got worse. The average human pulse rate shoukd be 72. Thileepan´s pulse was 52. Normal blood pressure should be 120/180. Thieepan´s was 80/50.
Gathering all his strength Thileepan spoke in two lines: I´m sure I´ll die. When I die I will be with our friends in Heaven and we will work together for our cause.” People´s struggle is intensified and in various towns people went on hunger strike. 6000 students came to Nallur to see Thileepan with tears in their eyes.
The journey will continue …..