இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத் தொடங்கியிருந்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென் யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்கயில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள்.

அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985ம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..

லெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.

தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச்செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.

தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.

திலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..?

வல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.

“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்கு வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.

இந்த எழுச்சியை, மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.

புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.

திலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதோ கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.

அவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..

பேச முடியவில்லை……

சிரிக்க முடியவில்லை………

ஆம் ! தூங்க மட்டும்தான் முடிகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது?

முரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.

“சிந்திய குருதியால்
சிவந்த தமிழ் மண்ணில்
சந்ததி ஒன்று
சரித்திரம் படைக்க….
முந்திடும் என்பதால்….
முளையிலே கிள்ளிட…..
சிந்தனை செய்தவர்
சிறுநரிக் கூட்டமாய்….
‘இந்தியப்படையெனும்’
பெயருடன் வந்தெம்
சந்திரன் போன்ற…
திலீபனின் உயிரைப்
பறித்திட எண்ணினால்…..
பாரிலே புரட்சி…..
வெடித்திடும் என்று….
வெறியுடன் அவர்களை…..
எச்சரிக்கின்றேன் !”

மேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

இரத்த அழுத்தம் – 80/50
நாடித் துடிப்பு – 140
சுவாசம் – 24

– தியாக வேள்வி தொடரும்….

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Day 8: Many people came to see Thileepan. Mathan, a young LTTE member from Batticaloa wanted to hunger strike with Thileepan for 2 days. In Mullaitheevu, a LTTE member Thiruchelvam announced he was going to hunger strike along with several civilians. The non-violent struggle spread faster than the armed struggle. Thileepan was the ideal force of all. That day Thileepan could not speak, could not walk and could not get up but thousands of people converted to non-violence with Thileepan. Pople who could not speak on the stage shared their ideas in writing and all written comments were sent to the Prime Minister of India, Rajiv Gandhi.

The journey will continue …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்