காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது

“பல் விளக்கி முகம் கழுவவில்லையோ?”

“இல்லை வாஞ்சியண்ணை… வேண்டாம்.”

கலைந்திருந்த தலைமயிரை நானே அவரருகில் சென்று வாரி விடுகிறேன். அவர் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. “வெளிக்குப் போகேல்லையோ?” என்று மெதுவாகக் கேட்கிறேன்.

“போகவேணும் போலதான் இருக்கு.”

“சரி கீழே இறங்கி வாருங்கோ” என்று கூறிவிட்டு, மேடையை விட்டு நானே முதலில் இறங்கி, கீழே இறங்குவதற்கு உதவி செய்ய முயன்றேன்.

“வேண்டாம் விடுங்கோ……நானே வருகின்றேன்” என்று என் கையை விலக்கிவிட்டு தானே கீழே குதிக்கின்றார்…

மனதை எவ்வளவு திடமாக வைத்திருக்கின்றார் என்று எனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டேன்.

மறைவிடத்துக்குச் சென்ற அவர், சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமப்பட்டார்.

5 நிமிடம்……

10 நிமிடம்……

15 நிமிடம்……

20 நிமிடம்……

நிமிடங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், எதுவித பயனும் ஏற்படவில்லை. அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. என் கண்கள் என்னையறியாமலே கலங்குகின்றன. மேடையின் வலப்புறத்தில் ஏறி அமர்ந்த திலீபன், தூரத்தில் தெரியும் வழக்கமான ஆட்களை அழைத்து உரையாடத் தொடங்கினார். “கண்டபடி பேசினால் களைப்பு வரும்… கொஞ்சம் பேச்சைக் குறையுங்கோ…” என்று அவரைத் தடுக்க முயல்கிறேன். ஆனால், என்னால் முடியவில்லை. தனக்கே உரிய சிரிப்பை என் வார்த்தைகளுக்குப் பதிலாக்கிவிட்டுத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவர் நீர் அருந்தி 45 மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இப்படி தன்னைத்தானே வருத்தப்போகிறார்?

இப்போதே சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு நாட்கள் போனால் என்னென்ன நடக்குமோ? என்று எண்ணிய நான், அவரின் காதுக்குள் குசு குசுக்கிறேன்.

“என்ன பகிடியா பண்ணுறீங்க?…… ஒரு சொட்டுத் தண்ணீரும் குடிக்கமாட்டேன் என்ற நிபந்தனையுடன்தானே இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கினனான்…… பிறகு எப்படி நான் தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற கேட்டீங்க?”…

என்று ஆவசத்துடன் என்மீது பாய்கிறார்.

“இல்லை…… இப்பவே உங்களுக்குச் சலம் போறது நின்று போச்சு…… இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மேலும் மேலும் கஷ்டமாக இருக்குமே…… அதுக்காகத்தான் கேட்டனான்……”

என்று அசடு வழியக் கூறிவிட்டு, வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

“இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம்…… சரியோ?…… உண்ணாவிரதம் என்றால் என்ன? …… தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான்…… இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது…… இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல…… வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது.”  

அவரின் பேச்சில் இருந்த உண்மைகள் எனக்கும் தெரியும். ஆனால், திலீபனின் உயிர் மிகவும் பெறுமதி மிக்கது…… அதை இப்படி வருந்த விடுவதா? என்ற ஏக்கத்தில்தான் அப்படிக் கேட்டேன். ஆனால் அவர் தன் உயர்ந்த சிந்தனையால் என் பேச்சுக்கு ஆப்பு வைத்துவிட்டார்

நேரம் செல்ல செல்ல நல்லூர் ஆலய மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கடந்த இரு நாட்களாக ஆயிரக்கணக்காக வந்திருந்த சனக்கூட்டம், இன்று இலட்சத்தைத் தாண்- -டியிருந்தது. யாழ்ப் பாண நகரத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து மாணவ – மாணவிகள் காலை 9 மணி முதல் வரிசைவரிசையாக, வெள்ளைச் சீருடையில் அணிவகுத்து வந்து மைதானத்தை நிறைக்கத் தொடங்கினர்.

திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒர் அங்கத்தவர் என்ற நினைப்பு விடுபட்டு, “தமிழ் இனத்தின் பிரதிநிதி” என்ற எண்ணம்தான் அந்தச் சனக்கூட்டத்தினர் மத்தியில் நிறைந்திருந்தது. தாய்க்குலம் – திலீபன் வாடி வதங்கியிருந்த கோலத்தைக் கண்டு கண்ணீர் சிந்தியது. அந்தக் கண்ணீர் மழையில் இதயம் கனிந்து விட்ட வருணபகவான் கூடத் தீடீரென்று பலமாகக் கண்ணீர் சொரியத் தொடங்கிவிட்டான்.

ஆம் !

அனலாகக் கொதித்துக்கொண்டிருந்த சூரியன், ஒரு பிள்ளையின் உடலை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காகத், தன்னைத் தானே கருமேகத்தின் போர்வைக்குள் மூடிக்கொண்டான் மழைநீர் கோவில் மைதானத்தில் ஆறாக ஒடிக்கொண்டிருந்தது. ஆனால், பொதுமக்களில் ஓருவர்கூட எழும்பால் அப்படியே இருந்தனர். அப்பப்பா! மக்களின் உணர்வு மழைக்கு முன்னிலையில் அந்த வருணனின் மழைநீர் வெகு சாதாரணமானது என்ற எண்ணம் நிதர்சனமாகத் தெரிந்தது.

வாடிய நிலையிலும், சோர்ந்த நிலையிலும் தன் உயிரினும் மேலான மக்கள் மழையில் நனைவதைக் கண்ட திலீபன், அவர்களை சனைய வேண்டாம் என்று கைகளை அசைத்துச் சைகை காட்டினார். ஆனால், அவர்களோ அசைவதாக இல்லை. “உன்னால் மட்டும் தானா தமிழினத்துக்காக மெழுகாக உருக முடியும்? …… உன் உயர்ந்த இலட்சியத்துக்கு முன் இந்த மழை வெகு சாதாரணமானது!” என்று கூறுவதுபோல், அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

முரளியும் – நிரஞ்சனும், வேறு சிலரும் படங்குகளை விரித்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.

ஒலிபெருக்கியில் காசி ஆனந்தனின் கவிதையொன்று முழக்கமிட்டுக்கொண்டிருந்தது.

“திலீபன் அழைப்பது சாவையா? – இந்த

சின்ன வயதில் இது தேவையா?” ……

மூன்றாம் நாளான இன்று இராண்டாவது மேடையில் சூடான பேச்சுக்களும், கண்ணீர்க் கவிதைகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பேச்சாளர்களில் ஒருவரும், எமது தீவிர ஆதரவாளருமான காங்கேசன்துறை கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்கள் இப்படிப் பேசினார்:

“தியாகி திலீபனின் உயிர் விலைமதிப்பற்றது. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மட்டும் உரியவர் அல்ல …… அவர் …… தமிழ் இனத்துக்கே சொந்தமானவர்… அப்படிப்பட்ட திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீராவது அருந்தி தன் உடலைக் காப்பாற்ற வேண்டும். ஆவர் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவலையைப் போக்கவேண்டும்…… இது எனது வேண்டுகோள் மட்டுமல்ல: இங்கே வந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வேண்டுகோளும் இதுதான்.”

அந்தப் பேச்சைக் கேட்ட திலீபனின் முகம் வாடியதை நான் அவதானித்தேன்…… தான் பேசப்போவதாகக் கூறினார். அவரிடம் ஒலிவாங்கியைக் கொடுத்தேன்.

“இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது…… நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் எi;னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு…… என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன்.” அவர் பேசி முடித்ததும், மழை ஓய்ந்துவிட்டது.

திலீபனுடன் சேர்ந்து அவன் கோரிக்கைகள் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தினமும் நல்லூர்க் கோவில் மைதானத்தில் அடையாள உண்ணாவிரதம் இருப்போர் தொகை அதிகாரித்துக் கொண்டே வந்தது.

பலர் தாமும் சாகும்வரை திலீபனைப்போல் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் உண்ணா- -விரதம் இருக்க விரும்புவதாக,எம்மிடம் வந்து கூறினர். அவர்களின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல் திணறினோம்.

செல்வி. சிவா துரையப்பா என்ற பெண் அச்சுவேலியைச் சேர்ந்தவர்…… 17.09.1987 இல் திலீபனுக்கு ஆதரவாக மூன்றாவது (சிறிய) மேடை ஒன்றில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்……

அன்றிரவு திலீபன் சிறுநீர் கழிக்க முடியாமல் மிகவும் அவஸ்தைப்பட்டார். வைத்தியர் ஒருவரை அழைத்துவந்து அவரைப் பிரிசோதிக்க ஏற்பாடு செய்தோம் ஆனால், திலீபன் அதை மறுத்துவிட்டார். எந்தவித பரிசோதனையும், சிகிச்சையும் தான் இறக்கும் வரை தனக்கு அளிக்கக்கூடாதென்று உறுதியாகக் கூறிவிட்டார்.

அன்று அவர் கஷ்டப்பட்டு உறங்கும்போது நேரம் நள்ளிரவு 1.00 மணி.

அவரின் நாடித்துடிப்பு :- 11, சுவாசம் – 24.

– தியாக வேள்வி தொடரும்….

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Day 3: When Thileepan woke up the next morning, his lips were cracked from not drinking water. He looked so tired. Thileepa went to bathroom, he tried for 20 minutes but he could not urinate. From 9 o´clock morning the young men came and sit around Thileepan. There were tear poems and heroic speech. And it rained heavily that day. That night the doctor was called to check Thileepan´s condition but Thileepan refused the check up. It was nearly 1 o´clock when Thileepan finally fell asleep.

The journey will continue …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்