
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.
அன்று இலங்கை அரசாங்கம் பாரத தேசத்தினை வைத்து தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை ஓர் சூழ்ச்சிபொறிக்குள் தள்ளியதோ அவ்வாறுதான் இந்த ஆண்டிலும் சிங்கள அரசு, இந்திய அரசினை மட்டுமன்றி சர்வதேச நாடுகளையும் தனது பயங்கரவாதம் என்ற சூழ்ச்சி திட்டத்தில் சிக்குற செய்து எமது விடுதலை போராட்டத்தினை இக்கட்டான சிக்கலிற்குள் தள்ளி விட்டிருக்கின்றது சிங்கள பெளத்த பேரினவாதம்.

இந்த நிலையில் தியாகதீபத்தின் முதல் நாள் பயணத்தில் (19987 செப்டெம்பர் 15) முக்கியமான விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 16ம் திகதி. இது திலீபனுடன் இரண்டாம் நாள். அன்று அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தைவிட்டு எழுந்து விட்டார். முகம் கழுவி தலைவாரிக்கொண்டார். சிறுநீர் கழித்தார் ஆனால் மலம் இன்னும் போகவில்லை. அவர் முகம் சோகமாக காணப்பட்டாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.
சகல தினசரி பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் படித்து முடித்தார். பத்து மணியளவிலே பக்கத்து மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளை படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்து தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தனர். நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமரா நாலா பக்கமும் சுழன்று படம்பிடித்துக் கொண்டிருந்தன.
மேடைகளில் கவிதைகள் முழங்கிக்கொண்டிருந்போது திலீபன் என் காதுக்குள் குசுகுசுத்தார். “நான் பேசப்போகிறேன் மைக்கை வேண்டி தாங்கோ வாஞ்சி அண்ண.” சாப்பிடாமல் குடிக்காமல் இருக்கிறிங்கள் களைத்து விடுவீர்கள்..என்று அவரை தடுக்க முயன்றேன். ” இரண்டு நிமிடம் மட்டும்.. நிப்பாட்டி விடுவன். ப்ளீஸ் மைக்கை வாங்கித்தாங்கோ ” என்று குரல் தளதளக்க கூறினார். அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது. கண்கள் குழி விழுந்து, முகம் சோர்ந்து காணப்பட்டாலும் அந்த பசுமையான சிரிப்பு மட்டும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தது.
இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் மேடையில் நின்ற தேவரிடம் மைக்கை பெற்றுக் கொடுத்தேன். திலீபன் பேசப்போவதை தேவர் ஒலிபெருக்கியில் அறிவித்ததும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. திலீபன் பேசுகிறார். ” எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுயநினைவுடன் இருப்பேனோ என்று தெரியாது அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன். நான் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். 650 பேர் வரையில் இன்று வரை மரணித்துள்ளோம்.

மில்லர் இறுதியாகப்போகும் போது என்னிடம் ஒரு வரி கூறினான். நான் அவனுடன் இறுதி வரை இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்களால் காண முடியாது என்பதே ஒரே ஏக்கம் ” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொரியை எடுத்துச்சென்றான். இறந்த 650 பேரும் அனேகமாக எனக்கு தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன். உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு தலைவரின் அனுமதியை கேட்டபோது அவர் கூறிய வரிகள் என் நினைவில் உள்ளன.
திலீபா நீ முன்னால் போ..நான் பின்னால் வருகிறேன் என்ற அவர்கூறினார். இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரை சிறிதும் மதிக்காத தலைவனை நீங்கள் பெற்று இருக்கிறீர்கள். அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தினை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும். இதனை வானத்தில் இருந்து இறந்த மற்ற போராளிகளுடன் சேர்ந்திருந்து நானும் பார்த்து மகிழ்வேன்.
நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப்புலிகள் உயிரினும் மேலான சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்.”
மிகவும் ஆறுதலாக சோர்வுடன் ஆனால் திடமுடன் பேசிய அவரின் பேச்சைக்கேட்டு மக்கள் கண்ணீர் சிந்தினர். அன்றிரவு தலைவர் வந்து திலீபனை பார்த்தார். சோர்வுடன் படுத்திருந்த திலீபனின் தலையை தனது கரங்களால் வருடினார். ஒரு தகப்பனின் அன்பையும் தாயின் பாசத்தையும் ஒன்றாக குழைத்தது போலிருந்தது அந்த வருடல். இரண்டு இமய மலைகளையும் என் கண்கள் விழுங்கிக்கொண்டிருந்தன. இரவு பனிரெண்டு மணிக்கு திலீபன் உறங்கத்தொடங்கினார். நானும் அவர் அருகிலேயே படுத்து விட்டேன்.
திலீபனின் வீட்டில் குணபாலன் என்ற சிறுவன் வேலை செய்வதற்காக இருந்தான். அவனது வறுமை நிலையைக் கண்ட திலீபன் தன் கையில் கிடைக்கும் பணத்தை அவனிடம் அடிக்கடி கொடுப்பார். யாழ். இந்துவில் அவர் படிக்கும்போது, வீட்டுக்கு வரும்போதெல்லாம் குணபாலனுக்காக கைநிறைய “டொபி”களுடன் வருவார். குணபாலனுக்கு ரீ.வி. பார்க்கும் பழக்கம் இருந்தது. தன் வேலைகளை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்குப்பின், பக்கத்துவீட்டிற்குச் சென்று அவன் ரீ.வி. பார்ப்பது வழக்கம். குணபாலனுக்காகத் திலீபன் தன் தந்தையிடம் ஒரு ரீ.வி. வாங்கி வைக்குமாறு பலமுறை கெஞ்சிக் கேட்டார்.
இவரது தொல்லை தாங்கமுடியாமல் இராசையா ஆசிரியர் ஒருநாள் ரீ.வி. யை வாங்கி வந்துவிட்டார். குணபாலனும் அன்றிலிருந்து எதுவித சிரமமுமின்றி ரீ.வி. பார்த்துவரத் தொடங்கினான். யார் மீதும் எளிதில் அன்பு வைப்பதிலும், இரக்கம் காட்டுவதிலும் திலீபனுக்கு நிகர் அவரேதான். அதற்கு இது ஒரு நல்ல உதாரணம். திலீபன் யாழ். இந்துவில் படிக்கும் போது அவரது நெருங்கிய நண்பனாக இருந்தவர்களில் கணேசன் என்பவரும் ஒருவர்: இவர் இப்போது ஒரு டொக்ரராக இருக்கின்றார். ஒருநாள் திலீபன், கணேசன் மற்றும் சிலர் ஊரெழுவிலுள்ள திலீபனின் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது யாழ். இந்துவில் பொருட்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. திலீபனின் வீட்டிலே சில மாதங்களுக்கு முன் ஒரு நாய் செத்து விட்டதால், அதை ஒரு மரத்தின் கீழ் கிடங்கு வெட்டித் தாட்டிருந்தார்கள். திலீபனும் நண்பர்களும் அந்தக் கிடங்கைக் கிண்டி நாயின் எலும்புக் கூட்டை வெளியில் எடுத்துத் துப்புரவு செய்தார்கள். அப்போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே போனாலும், திலீபனும் நண்பர்களும் அதைப் பொருட்படுத்தாமல் தமது வேலையை முடித்துவிட்டு, அந்த எழும்புக்கூட்டை அன்றே எடுத்துச்சென்று பொருட்காட்சியில் வைத்தனர். எதையும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால்தான் தான் இந்த உண்ணவிரதப் போராட்டத்தில் இறக்க நேரிட்டால் தனது உடலை யாழ். வைத்திய பீடத்துக்கு ஆராய்ச்சிப் படிப்புக்காக அனுப்பிவைக்கும்படி அவர் கூறினார் போலும்?
– தியாக வேள்வி தொடரும்….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
Day 2: Thileepan woke up at five in the morning. Went to bathroom, washed his face and brushed his hair. He finished reading all the newspapers. Many of Thileepan´s friends read poetry. When Thileepan want to talk his friends denied because it would take Thileepan´s energy. He promised to talk only for two minutes and he only talked for two minutes. Also that night the national leader Prabhakaran came to see Thileepan. Thileepan went to bed at 12 o´clock.
The journey will continue …..