15.09.2023

அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!

அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாக முனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின் உதவியோடு சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பினால் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகளுடனும் ஆற்ற இயலாத துயருடனும் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. இன்றுவரை சிங்கள அரசு வெவ்வேறு வடிவங்களில் தமிழின அழிப்பைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழின அழிப்புக்கு நீதி கேட்டும் வன்பறிப்புச் செய்யப்பட்ட தமிழீழ தேசத்தை மீட்டு, தமிழர் உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அறவழியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழத் தேசியத்தலைவரது வழிகாட்டலில் எமது விடுதலைப்போராட்டம் ஈட்டிய சாதனைகள் தமிழினத்தைத் தலைநிமிர வைப்பவை. எமது மக்கள் உரிமையோடும், சுதந்திரத்தோடும், பாதுகாப்போடும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக வீரகாவியமான மாவீரர்களின் தியாகங்கள் அளப்பெரியவை. தமிழீழம் என்ற இலட்சியக்கனவோடு தம் உயிர்க்கொடை தந்து, வீரவரலாறாகிப்போன விடுதலைப்புலிப் போராளிகளின் வீரச்சாவுகளில் அர்ப்பணிப்புகள் நிறைந்த பல்லாயிரம் வரலாறுகள் புதைந்து கிடக்கின்றன.

மருத்துவத்துறை மாணவனான பார்த்தீபன் அவர்கள் சிங்கள இனவெறி அரசுகள் தமிழ் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்ட இன அடக்குமுறைகளைக் கண்டு, தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்தார். திலீபன் என்ற பெயரோடு ஆளுமைமிக்க போராளியாகவும் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். தனது அரசியல்துறைக்கான பணிகளுக்கு மத்தியிலும் பல சமர்க்களமாடி வயிற்றிலும், கையிலும் விழுப்புண் அடைந்திருந்த அவர், இந்திய அமைதிப்படை என்ற பெயரில் தமிழீழ தேசத்தில் வந்திறங்கிய இந்திய ஆக்கிரமிப்புப்படை, தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் செய்த அநீதிகளுக்கு எதிராக இந்திய அரசிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் நாள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். நீர் கூட அருந்தாமல் பன்னிரு நாள்கள் தன்னை உருக்கி, தன் உயிரை செப்ரெம்பர் 26 அன்று தமிழீழ மண்ணுக்காக ஈகம் செய்தார்.

இலட்சியப்பற்றுறுதி கொண்ட தியாகதீபம் திலீபன் அவர்கள் தான் நேசித்த மக்களுக்காகவும் தமிழீழ விடுதலைக்காகவும் உலகில் இதுவரை யாரும் செய்திராத அதியுயர் தியாகத்தைச் செய்தார். இதன்மூலம் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல அகிம்சைவழிப் போராட்டத்திலும் தமிழினம் அறத்தின்வழி நிற்கிறது என்பதை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டினார்.

அன்பார்ந்த தமிழீழ மக்களே!
தமிழீழ விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எங்கள் மாவீரர்கள், இன்றும் எம்மைத் தமிழீழ விடுதலை நோக்கிய இலட்சியப் பயணத்தில் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். அவர்களை என்றென்றும் நெஞ்சில் இருத்துவோம். மாவீரர்களை நினைவேந்தும் 21 நவம்பர் முதல் 27 நவம்பர் வரையான மாவீரர் வார காலப்பகுதியிலும், தமிழின அழிப்பு நாளான மே 18 உம் அதற்கு முன் வாரத்திலும், தியாகதீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பிருந்து உருகி உயிரீந்த செப்ரெம்பர் 15ஆம் நாளிலிருந்து 26 ஆம் நாள் வரையான 12 நாள் காலப்பகுதியிலும் தமிழர்களாகிய நாம் எவ்வித களியாட்ட நிகழ்வுகளையும் நடத்தாது, புனிதமான நாள்களாகக் கருதி எமது உரிமைகளை வென்றெடுக்க உறுதியெடுத்துக்கொள்வோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “

  

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்