
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக் மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார்.
அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம்.
தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார்
எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத்திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போனார்.
போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்)
காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன.
ஐந்து அம்ச கோரிக்கை
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணாவிரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன்
அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப்பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவதுமேடையிலே நடைபெற்றுக்பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன்.
15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப்போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின்,யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன்.
மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்
அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத்தொடங்கினார்.மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத்தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க்குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது.
கவிதைத்தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத்தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்.
திலீபனின் தியாகபயணம் ஓர்…..
ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான்.
நல்லூர் ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்
உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க்கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன்.
அப்போது ஒர் மேடையில் முழங்கிக்கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணாவிரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார்.
தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார்.
இந்தக்காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பதுபோல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார்.
அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக்கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால்தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச்சென்றார்.
பத்திரிகையாளர் வருகை
அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக்கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார்.
முதல் நாள் முடிவு,அதிகாலை 1.30 இற்கு உறங்கினார்.
அவர் ஆழ்ந்து உறங்கத்தொடங்கியபோது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக்கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர்.
இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது.
– தியாக வேள்வி தொடரும்….
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Thileepan was born in Oorelu in Jaffna on November 27, 1967. After the of Father Selva´s non-violent struggle, the Tamil people took armed struggle. Thileepan, who was involved in the armed struggle, went on a hunger strike with five demands on September 15 1987. He also announced that he was not going to drink water intil the demands were met. However, those demands were not met and Thileepan died on September 26 1987, the 12th day of the hunger strike.
Five demands put forward by Thileepan:
1. Newly planned settlement in the name of resettlement in the North Eastern Provinces of Sri Lanka must be stopped.
2. All Tamil political prisoners held in prisons and military police detention camps must be released.
3. The emergency law should be completely repealed.
4. The weapons provided to the city military must be completely dismantled.
5. Efforts to open new police stations in Tamil area should be completely stopped.
The journey will continue …..