நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட சர்வதேச விசாரணை தேவையென கேட்டிருக்கின்றார். அவர்கள் இந்த நாட்டை ஆளுகின்றவர்களாக அல்லது ஆட்சி அதிகாரம் வலிமைமிக்கவர்களாக இருக்கின்ற போது தங்களுக்கு அந்த விடயங்களை கண்டறிவதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோருகின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என வருகின்ற போது நீதியான விசாரணை தேவை என அதிக பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரக்கூடிய சூழல் இருக்கிறது. அப்படி இருக்கையில் உள்ளக விசாரணை மூலம் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு தீர்வினை பெற முடியாதென ஒரு பகுதி பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்திலே நாடாளுமன்றத்திலே இருக்க கூடிய ஆளும்தரப்பு , எதிர்தரப்பிலே இருக்ககூடிய ஒட்டுமொத்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இங்கு அப்படி குற்றமே நடைபெறவில்லையென மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள்.

14 ஆண்டுகளாக எங்களுக்கான நீதி கிடைப்பதற்கான வழிவகைகள் எந்த இடத்திலும் விட்டு வைக்கவில்லை. அவ்வாறான சூழலில் எமக்கான இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமாக மாத்திரம் தான் சாத்தியப்படும்.

சிங்கள தரப்புகள் இனவாதம் என்ற அடிப்படையில் சிந்திக்காமல் உங்களுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கின்ற போது சர்வதேச விசாரணையை கோருகின்ற நீங்கள் இந்த நாட்டில் மக்களாக இருக்க கூடிய ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதனையும் நீங்கள் வலியுறுத்த வேண்டும். அது நாடு முன்னோக்கி அபிவிருத்தி பாதையில் செல்வதற்கான ஒரு சூழலை உருவாக்கும். ஏனென்றால் இனப்படுகொலையாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும்.

அத்தோடு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் அகழ்வுகள் நடைபெறுகின்ற போது ஊடகவியலாளர்கள் அதனை ஆவணப்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலவரையறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்களை மறைக்ககூடும் என்ற சந்தேகம் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை உறுதிப்படுத்துகின்ற தகடு , இலக்கங்கள் எடுக்கப்படுகின்ற போது அதனை மறைக்கின்ற நிலமை காணப்படுமாக இருந்தால் உடல்கள் யாருடையது என்பது தெரியாமல் இருக்கும். முழுமையான ஆவணப்படுத்தலை ஊடகவியலாளர்கள் ஆவணப்படுத்த வேண்டும் .

ஏனெனில் அகழ்கின்ற தரப்பு அரச தரப்பாக இருக்கின்றபடியால் அரச தரப்பே தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு காரணமாக இருக்கும் நிலையில் குறிப்பாக பொலிஸ் திணைக்களம் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. இராணுவ தரப்பு குற்றங்களிலே ஈடுபட்டிருக்கிறது.

இது ஒரு நம்பகத்தன்மையாக மக்களால் பார்க்கப்படவில்லை. என்னை பொறுத்தமட்டில் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெற வேண்டும். சர்வதேச சமூகம் இந்த விடயத்திலே அக்கறை கொள்ள வேண்டும்.

தொடர்ச்சியாக சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம். இம்முறையும் சர்வதேச மனித உரிமைகள் பேரவையிலே இவ் விடயங்களை வலியுறுத்த இருக்கின்றோம்.

சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக இன படுகொலை குற்றவாளிகள்  தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டும் தான் இனங்கள் ஐக்கியப்பட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரே வழியாக இருக்கும் என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்