
– துரைராசா ஜெயராஜ்
வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் தேசிய அரசியலிலும், சிங்கள தேசிய அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல் என சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அனைத்து ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் பரவலடைந்திருக்கின்றன.
இத்தகைய ஆக்கிரமிப்புத் தருணங்களைத் தமிழ் மக்கள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், அதற்கு எதிராகப் போராடத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து போராட இளைஞர்களும், அக்கட்சியின் செயற்பாட்டாளர்களும், அக்கட்சியை வழிநடத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராசா கஜேந்திரனும் களத்துக்கு வந்துவிடுகின்றனர்.

பலமான தம் எதிர்ப்புக்குரலை எழுப்புகின்றனர். இதனால் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்குள்ளும் முடக்கப்பட்டிருக்கிற தமிழர்கள் மீளவும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் மனத் தைரியத்தைப் பெற்றுவருகின்றனர். இந்தப் போக்கு தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் சிங்கள அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
தையிட்டி பௌத்த விகாரை அமைப்புக்கு எதிரான போராட்டம், திருகோணமலை நெல்சன் திரையரங்கில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிரான போராட்டம், வெடுக்குநாறிமலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு எதிரான போராட்டம், குருந்தூர்மலையில் தமிழர் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அண்மைக்காலமாக ஜனநாயக வழி எதிரப்புப் போராட்டங்களை மக்கள்மயப்படுத்தி வருகின்றது.

சமநேரத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில், ஆங்கிலத்தில் ஆற்றும் ஆய்வுமிகு உரைகள் சர்வதேச ரீதியிலும், சிங்களவர்கள் மத்தியிலும் அதிக கவனத்தைப் பெறுகின்றன. களத்தில் உண்மையில் என்ன நடக்கிறது, சிறீலங்கா அரசு இன்றும் தமிழர் தாயகத்தில் என்னென்ன வடிவங்களில் இனப்படுகொலையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது,
இனப்பிரச்சினையின் அடிப்படை என்ன, சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்கள மக்களை எப்படியெல்லாம் முட்டாளாக்கிவைத்து அரசியல் செய்கிறது, தமிழர்களுக்கான நீதி விடயத்தில் சர்வதேச தலையீட்டின் அவசியம், 13 ஆம் திருத்ததை நிராகரிப்பதற்கான காரணங்கள் எனப் பல விடயங்களை தன் உரைகள் மூலம் உலகின் முன் கொண்டுவருகின்றார் அவர். இதனால் சிறீலங்கா அரசு நாடாளுமன்றத்துக்குள்ளேயும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், சர்வதேச அரங்கிலும் அம்பலப்பட்டு நிற்கிறது.

எனவேதான் சிறீலங்கா அரசினால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் செயற்பாடுகளை முடக்கும் விதமாக அவரை இலக்குவைக்கிறது சிறீலங்கா. கடந்த ஆனி மாதத்தில் வடமராட்சி கிழக்குப் பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நடத்திய மக்கள் சந்திப்புக்குள் அத்துமீறி நுழைந்த சிறீலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், அவருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்ததோடு, தாக்கிவிட்டும் தப்பியோடினர்.
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர், அவரை விசாரிக்க வேண்டும் என்பதாகக் கூறி, மிரட்டும் நோக்குடன், கொழும்பிலிருந்து மருதங்கேணி வரை ஒரு கைதி போல அழைத்து வந்தது சிறிலங்கா பொலிஸ்.
அதற்குப் பின்னர் கடந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் கொழும்பில் உள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டினைச் சுற்றிவளைத்த சிங்கள அடிப்படைவாத பௌத்த பிக்கு தலைமையிலான குழு போராட்டம் ஒன்றினை நடத்தியிருந்தது. பௌத்த அடிப்படைவாத நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில ஏற்பாடு செய்திருந்த இந்த சுற்றிவளைப்பில் முதல் நாள் அவர் கலந்துகொள்ளவில்லை.
இரண்டாம் நாள் உதய கம்மன்பில தலைமையிலான பல பௌத்த பிக்குகள், சிங்கள அடிப்படைவாதிகள் கலந்துகொண்டு, கஜேந்திரகுமாரின் வீட்டினை சுற்றிவளைத்துப் போராடினர். கொழும்பில் தமிழ் அரசியல்வாதியொருவர் வாழ்வது தேச விரோதக் குற்றம், உடனடியாகவே வெளியேற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் இடம்பெற்ற இந்தப் போராட்டங்கள், இந்நாடு எவ்வளவு தூரம் இனவாதச் சகதிக்குள் சிக்கிக் கிடக்கிறது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்துவரும் அரசியலும், பாராளுமன்ற உரைகளும் நூறுவீதம் சரியானது என்ற செய்தியை உலகிற்கு உணர்த்தும் மெய்க்காட்சிகள்.