
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இலங்கையில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சனல் – 4 ஆவணப்பட விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பபட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “பிள்ளையான் என்பவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகா ஆவார்.
இவரை வைத்துதான் மகிந்த தரப்பால் தாக்குதலுக்கான அனைத்து திட்டமிடல்களும் வகுக்கப்பட்டுள்ளன.
சனல் – 4 ஊடகத்தின் மூலம் மௌலானாவே சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான திடுக்கிடும் தகவல்களை “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான வெளிப்படுத்தல்கள்” என்ற மகுடத்திலான ஆவணப்படத்தின் மூலம் இன்று வெளியிடவுள்ளதாக சனல் 4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் சனல் 4 செய்திச்சேவையினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணப்படம் பல்வேறு அதிர்வுகளைத் தோற்றுவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ள உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படத்தில் இத்தாக்குதல்களுடன் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் தொடர்புப்பட்டிருந்தமை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகவுள்ளதாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு முக்கிய தகவல்கள் தற்போது புகலிடம் கோரி ஜெனிவா சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவரும், பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் பேச்சாளருமான அஸாட் மௌலானா என்பவரால் வழங்கப்பட்டிருப்பதாக லண்டன் டைம்ஸின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்படம் இன்றைய தினம் (05.09.2023) லண்டன் நேரப்படி இரவு 11.05 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை ஒளிபரப்பப்படவிருப்பதாக சனல் 4 செய்திச்சேவை அறிவித்துள்ளது.