
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிங்கள பேரினவாத பிக்கு தலைமையிலான காணி அபகரிப்பு குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்
பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.
இதன் பிற்பாடு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பிச் செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் சிங்கள பேரினவாத பிக்கு ஒருவரும் இனைந்து அனைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்து சுமாராக 4 மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்துவைத்துள்ளனர்.
இதில் பங்கேற்ற சைவ மதகுரு தலைமுடியில் பிடித்து இழுத்து தாக்கப்பட்டதாகவும், ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகள் பறிக்கப்பட்டு அதிலிருந்த அனைத்து விடயங்களும் அழிக்கப்பட்ட பின்னர் அங்கு நடந்தவற்றை வெளியே சொல்லக்கூடாது என வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.
அங்கு சென்ற அனைவரையும் வாகனத்திற்குள் வைத்து எரித்து விடுவதாகவும் கூறி கெட்ட வார்த்தைகளால் அங்கிருந்த மதத்தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்விடத்தில் இருந்து பாதிரியார் அனுப்பிவைத்த ஒலிவடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
இவர்களை மீட்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் அந்த பகுதிக்கு சென்றும் அவர்களும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவே நடந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தோடு இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

