
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையில், சர்வதேச விசாரணையை கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில், சிறிலங்கா அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி இன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது நீண்டகாலமாக தீர்வில்லாமல் செல்லும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகளின் போராட்டத்திற்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என கலந்துரையாடப்பட்டது.
போராட்டத்திற்கு தீர்வு

இந்தக் கலந்துரையாடல் குறித்து அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தெரிவிக்கையில், “எங்களது போராட்டத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லவேண்டும், அனைத்துலக சாசனங்களும் எங்களது போராட்டத்திற்கு தீர்வை பெற்று தரவேண்டும் என நாங்கள் இன்று வலியுறுத்தியிருந்தோம்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க இணைப்பாளர் சிவானந்தன் ஜெனித்தா தெரிவிக்கையில், “இந்த சந்திப்பின் போது நாம் எமது கருத்துக்களை அவர்களிடம் முன் வைத்திருந்தோம்.
வருங்காலத்தில் அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதையும் நினைவுபடுத்தி எமது உறவுகளுக்காக நீதியை சர்வதேசம் பெற்று தரவேண்டும் எமது சாட்சியங்கள் அழிக்கப்படமுன் எமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றி அவர்களிடம் கலந்துரையாடியிருந்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் குறித்து மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி கூறுகையில், “நாங்கள் இன்று கனடா தூதரகர் உட்பட வேறு பல நாட்டு தூதுவர்களுடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு இருந்தோம். எங்கள் கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்திருந்தோம்.
அதாவது நாங்கள் பல போராட்டங்களை செய்து எங்கள் நிலைப்பாட்டை ஜெனிவா வரை தெரியப்படுத்தியிருந்தும் இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்காமையால் நாங்கள் இவர்களிடம் வந்துள்ளோம். இவர்களாவது எங்களுக்கு நல்லதொரு தீர்வினை பெற்று தரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.