கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆதிகுடிகளுடனான இனநல்லிணக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அது தொடர்பில் நாம் பணியாற்றுகிறோம். அது சுலபமல்ல. அது நீண்ட பணி.” என்று கூறினார். அதாவது தவறு, குற்றம் நிகழ்ந்ததை, அந்நாட்டு அதிகாரபூர்வ தூதுவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மேலும் இதிலிருந்து இலங்கை கற்க வேண்டிய பாடம் என்ன? வரலாற்றில் தவறுகள், குற்றங்கள் எங்கும் நிகழும். ஆனால் அந்த தவறுகள், குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, முதலில் நாம் தவறுகள், குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மன்னிப்பு கோருவது என்பதுகூட இரண்டாம் பட்சம்தான் என்பது என் நிலைப்பாடு. ஆனால், முதல் தவறுகள், குற்றங்கள் நிகழ்ந்தன என்ற உண்மை ஏற்கப்பட வேண்டும். இதுவே இன, மத, நல்லிணக்கத்துக்கு அடிப்படை என்ற பாடத்தை  கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷின் கூற்றில் இருந்து இலங்கை அரசியல், மத, சமூக தலைவர்கள் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமுகூ தலைவர் மனோ கணேசன், கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு கொழும்பில் நடைபெற்ற கனேடிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பில் கனேடிய தூதுவர் நிகழ்த்திய உரை தொடர்பில் மனோ கணேசன்   மேலும் கூறியதாவது,

கனேடிய தூதுவரின் நிலைப்பாடுகள் எனக்கு புதிதல்ல. அவையே எனது நிலைப்பாடுகளும் ஆகும். தவறுகள், குற்றங்கள் ஆகியவற்றை எல்லா தரப்பும் வரலாற்றில் செய்கின்றன. அரசு நிறுவனமும் செய்கிறது. அரசற்ற நிறுவனமும் செய்கிறது. இங்கு யாரும் புனிதர் அல்ல.

காலம் ஓடுகிறது. இந்த கால ஓட்டத்தில் ஓரிடத்திலேயே தேங்கி தெப்பமாக நிற்க முடியாது. காலம் அனைத்தையும் கடத்தும். இங்கே அனைத்தும் கடந்து போகும். அப்போது புதிய பார்வைகள் தோன்றுகின்றன. புதிய சிந்தனைகள் உதிக்கின்றன. காலம் காட்டும் மாற்றங்களை ஏற்காவிட்டால், காலம் எம்மை தூக்கி வீசிவிட்டு போய் கொண்டே இருக்கும். அது யாருக்காகவும் காத்திருக்காது.  எனது பார்வை இதுதான்.

நண்பர் எரிக் வோல்ஷ் தொடர்ந்தும் சொன்னார். “பல்லின, பன்மத, பன்மொழி என்ற பன்மைத்துவதை நாம் கொண்டாடுகிறோம்” என்று சொன்னார். “அதுவே எமது பலம்” என்று சொன்னார். அதையே அவருக்கு முன் பேசும்போது நானும் சொன்னேன். இவற்றை என் சமூக ஊடக தளங்களில் பாருங்கள்.

இலங்கை பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையை நாம் ஒருபோதும் விட்டுக்கொண்டுக்க கூடாது. அதுவே எமது எதிர்கால மீட்சிக்கு ஒரே வழி. எனது வழி. எமது வலியை போக்கும் வழி எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்