
பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் கடந்த 24 ஆம் திகதியன்று பப்புவா நியூ கினியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில்,அங்கிருந்து அவர் நாடு திரும்பும் வேளையில் இலங்கையில் சிறிது நேரம் தங்கியிருப்பதுடன்,அதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பிரான்ஸின் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
மக்ரோனின் விஜயமானது, இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை வலுப்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், புதிய உலகளாவிய நிதிய உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஜீன் மாதம் பிரான்ஸிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.