மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை தீர்மானிக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்ச்சியா கேலிக் கூத்தாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது.

மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார, கல்வி அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டிய அபிவிருத்தி குழு கூட்டமானது அரசியல் ரீதியாகவும், அதிகார ரீதியாகவும், இன ரீதியாகவும், கட்சி ரீதியாகவும், அதிகார ரீதியாகவும் பிளவுபட்ட ஒரு மன நோயாளர்களை கொண்டு விவாதம் நடாத்தும் இடமாக மாறியுள்ளது.

இப்படியான அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது?

மக்களின் வரிப் பணத்தில் நடாத்தப்படும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அரசியல் பிரதிநிதிகள் முதல் கொண்டு அரசாங்க அதிகாரிகள் வரை அனைவரும் மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வளங்கள் குறித்தோ அதன் பாதுகாப்பு குறித்தோ தொழில்நுட்ப ரீதியாகவோ, செயற்பாட்டு ரீதியாக ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாத நிலையில் தான் இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

முழுக்க முழுக்க பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு 10 வீதம், 5 வீதம் கொமிசன் பெறுவதை மட்டுமே இலக்காக கொண்டு உருவாக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களும் அதற்கு அனுமதி வழங்கும் அபிவிருத்தி கூட்டமாகவே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் உள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னராவது இலாப நோக்கற்ற அபிவிருத்தி திட்டங்களை முதன்மை படுத்தி இருக்கவேண்டும்.

இயற்கையை அழித்து செய்யப்படும் அபிவிருத்தி திட்டங்களால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு இன்றி செயற்படும் அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது.

பருவ மழைக்கு தேவையான காடுகள், மலைக் குன்றுகள், மரங்களை அழித்து விட்டு குளங்களை அபிவிருத்தி செய்வதால் என்ன பயன்?

மாற்று பொறிமுறைகளை ஏன் உருவாக்க முடியவில்லை

படித்த அறிவு, தேடிக் கற்றுக் கொள்வது, அல்லது துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டு பணியாற்றுவது உட்பட மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை நடாத்துபவர்களுக்கு மண்ணின் மீதும் மக்களின் மீதும் மக்கள் வாழும் இயற்கை மீதும் பற்று இருக்க வேண்டும் அதற்காக கற்றும் இருக்க வேண்டும்.

இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் என்ற எதிர்காலம் குறித்த சிந்தனைகள் இருக்க வேண்டும்.

மாவட்ட கழிவகற்றல் முகாமைத்துவம் குறித்து இதுவரை நிரந்தர பொறிமுறை ஒன்றை உருவாக்கி செயற்பட முடியவில்லை?

ஆற்று மணல் அகழ்வு, கிறவல் அகழ்வு உட்பட மாவட்ட கனிமவளங்களை பாதுகாப்பதற்கும் இதனால் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்தில் ஏற்படுத்தப்படும் அரசியல் தலையீடுகள்,ஊழல் மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மாற்று பொறிமுறைகளை உருவாக்க இன்றுவரை முடியவில்லை.

விவசாய பொருட்களுக்கான களஞ்சிய சாலை, நெல் கொள்வனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரச நிர்வாகத்திற்கு வெளியே தனியார் துறை ஊடாக ஒரு பொறிமுறையை உருவாக்க முடியாதுள்ளது.

ஒப்பந்த காரர்களையும் அவர்களூடாக பெறப்படும் கொமிசனையும் இல்லாமல் செய்து ஒப்பந்த வேலைகள் தரமாக நடைபெறுவதையும், ஒப்பந்த வேலைகளை இடைநிறுத்தி மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் ஒப்பந்தகாரர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதோடு புதிய ஒப்பந்தகாரர்களை அனுமதிக்கவும் அபிவிருத்தி குழுவால் முடியாது போயுள்ளது.

நிலைபேறான நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி திட்டங்களுக்கும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் மாவட்ட அபிவிருத்தி குழுவில் உள்ள அனைவருமே.

மக்களின் வாக்குகளை பெற்ற அரசியல் பிரதிநிதிகள் தொடங்கி மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அரச அதிகாரிகள் வரை அனைவரும் பொறுப்புகள் உண்டு.

ஆனால் அபிவிருத்தி குழு தலைவரின் பிழையான அணுகுமுறை அதிகாரப் போக்கு, அரசியல் காழ்வுணர்ச்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தனது கூட்டுப் பொறுப்பை இழந்துள்ளதோடு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் தங்களது பொறுப்பை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.

அரசின் மக்கள் நல திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், மக்களுக்கும் மாவட்டத்திற்கும் தீங்கு பயக்கும் அபிவிருத்தி திட்டங்களை ஆதாரங்களுடன், ஆய்வுகளுடனும் எதிர்ப்பதோடு அதனை நடைமுறைப் படுத்த விடாது தடுப்பதுவுமே எதிர்க் கட்சி அரசியல் பிரதிநிதிகளின் பணியாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து ஊடக விளம்பரங்களுக்காக பாடசாலை மாணவர்களைப் போல் “வாடா போடா” என்று பேசுவதெல்லாம் தான் மாவட்டத்தின் அபிவிருத்தி சிந்தனைகளா? என்று கேட்கத் தோன்றுகிறது.

ஊடகவியலாளர்களை மதிக்க தெரியாத மாவட்ட அபிவிருத்தி குழு

மாவட்டத்தில் மிகப்பெரிய நூலகம் கட்டுவது மட்டும் அபிவிருத்தி அல்ல அந்த நூலகத்திற்கு சென்று நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் குறித்து படிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்கப்படும் ஊடகவியலாளர்களை மதிக்க தெரியாத மாவட்ட அபிவிருத்தி குழுவால் மாவட்டத்தின் மக்கள் நலன் சார்ந்தோ மக்கள் நல அபிவிருத்தி குறித்தோ எப்படி சிந்திக்க முடியும்.

ஊடகவியலாளர்களையும், ஊடகங்களையும் கண்டு அச்சப்படுபவர்கள் மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் என்பதோடு தாங்கள் செய்யும் பிழையான தவறான பக்கச்சார்பான அபிவிருத்தி திட்டங்கள் வெளியில் தெரியக் கூடாது என்று கருதுகின்றனர் என்று தானே அர்த்தம்.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு வரும் ஒரு ஐந்து ஊடகவியலாளர்களுக்கு இருக்கைகள் போட முடியாத உங்களது அபிவிருத்தி குழுவால், அபிவிருத்தி குழு தலைவரால் மாவட்டத்திற்கு என்ன செய்ய முடியும்.

ஆளுமை அற்ற, அரவணைத்துச் செல்ல முடியாத, விமர்சனங்களை, தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களை கண்டு அஞ்சும் அபிவிருத்தி அடையாத சிந்தனைகளுடன் இருக்கும் அபிவிருத்தி குழு தலைவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை மாறாக மண் மாபியாக்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும், மதுபான சாலை முதலாலிகளுக்குமே அதிக நன்மை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்